சோலார் பேனல்கள் முழு பயன்பாட்டிற்கு வராததால் மின் கட்டணம் உயர்வு: அரசு மருத்துவக்கல்லுாரியில் 4 ஆண்டுகளாக அலட்சியம்

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக சோலார் பேனல்கள் நிறுவப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகளை கடந்தும் பொதுப்பணித்துறை அலட்சியத்தால் இதுவரை முழு பயன்பாட்டுக்கு வராததால் அதிக மின் கட்டணம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன.12ல் திறக்கப்பட்டது. கல்லுாரியின் முக்கிய தேவையான மின்சாரத்தை கல்லுாரி வளாகத்திலே உற்பத்தி செய்வதற்காகவும், கட்டணத்தை குறைப்பதற்காகவும் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஆனால் அரசு மருத்துவக்கல்லுாரி திறந்து 4 ஆண்டுகளை கடந்தும் இதுவரை சோலார் பேனல்கள் எதுவும் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.

இதனால் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் அதிக தொகை மின்சாரத்திற்கு செலவிடும் நிலை உருவாகியுள்ளது.

இந்த சோலார் பேனல்களை எப்போது முழு பயன்பாட்டுக்கு கொண்டுவருவீர்கள் என பொதுப்பணித்துறையிடம் கேட்கும் போது எல்லாம் பணிகளை துவங்கி விடுகிறோம் என தெரிவித்து வந்த நிலையில் தற்போது எங்களால் இப்பணிகளை செய்ய இயலாது என தெரிவித்து விட்டனர்.

இயற்கை பேரிடர் காலங்களில் மின்தடை ஏற்படும் போது மருத்துவ மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உண்டாகி மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

எனவே விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியில் அனைத்து சோலார் பேனல்களையும் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement