பொதுமக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே, 14 ஆண்டுகால பொதுமக்கள் எதிர்ப்பினாலும், பல கட்ட போராட்டத்தாலும், விஜிலாபுரம் டாஸ்மாக் கடை மூடப்பட்டது..

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த விஜிலாபுரம் கிராமத்தில், வள்ளிப்பட்டு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை, கடந்த, 14 வருடமாக இயங்கி வருகிறது. இந்த கடை ஆரம்பிக்கும்பொது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் மீறி, டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கடையால், பொதுமக்கள், பெண்கள், முதியவர்கள், பள்ளி மாணவ, மாணவியர் கடும் பாதிப்புக்குள்ளாகினர். மது பிரியர்கள் பைக்கை வேகமாக ஓட்டி சென்றதில் விபத்து ஏற்பட்டு, 3 பேர் பலியாகி உள்ளனர். இதனால், இக்கிராம மக்கள் இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். மேலும் கிராம சபா கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி, கடையை மூட வலியுறத்தல், சாலை மறியல், அரசு பஸ் சிறைபிடிப்பு என பல கட்ட போராட்டங்கள் நடத்தியதால் வெறு வழியின்றி அந்த கடையை மூடிவிட்டு, வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்தனர். அதன்படி நிரந்தரமாக அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இந்நிலையில், திருப்பத்துார் நகராட்சிக்குட்பட்ட ஏரிக்கோரி பகுதியில், ஏற்கனவே அப்பகுதியில் அருகருகே, 3 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், நேற்று மேலும் ஒரு டாஸ்மாக் கடை புதியதாக திறக்கப்பட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருப்பத்துார் த.வெ.க., எம்.எல்.ஏ., திருப்பதி சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட அறிவுறுத்தினார். அதன்பேரில், புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை உடனடியாக மூடப்பட்டது.

Advertisement