அறநிலையத்துறை லோகோவாக ஸ்ரீவில்லிபுத்துார் கோபுரம்; அரசுக்கு ஹிந்து அமைப்புகள் கோரிக்கை

11

சென்னை: திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக்கோரி, பாரத் ஹிந்து முன்னணி சார்பில், சென்னை, எழும்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், 'அ.தி.மு.க., ஆட்சியில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு எதிராக கொண்டு வந்த, 'அரசாணை எண் 598' ஐ நீக்க வேண்டும்; தி.மு.க., ஆட்சியில் மாற்றப்பட்ட, ஸ்ரீவில்லிபுத்துார் கோபுர சின்னத்தை, மீண்டும் ஹிந்து சமய அறநிலையத்துறை சின்னமாக அமைக்க வேண்டும்' ஆகிய கோரிக்கைகளையும் வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாரத் ஹிந்து முன்னணி தலைவர் பிரபு பேசுகையில், 'திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால், தீபமேற்ற, தி.மு.க., அரசு தடை விதித்தது. தற்போதைய முதல்வர் விஜய்க்கு, ஹிந்துக்கள் மீது அக்கறை இருக்குமானால், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்,'' என்றார்.

ஆர்ப்பாட்டத்தில், ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் பேசியதாவது: ஓட்டு வங்கி அரசியலுக்காக, பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை, தி.மு.க., நசுக்கியது. அந்த தவறை த.வெ.க., அரசு செய்யக்கூடாது. தெற்கின் திருவண்ணாமலையாக, ஆன்மிக ரீதியில், திருப்பரங்குன்றம் வளர்ச்சி பெற, தீபம் ஏற்றுவது அவசியம்.

ஹிந்து சமய அறநிலையத்துறை 'லோகோ'வாக, 'மசூதி மினார்' போன்ற சின்னம் இருப்பதை அகற்றி, கோவில் கோபுரத்தை சின்னமாக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு, மசூதி அமைந்த பகுதிகளை காரணம் காட்டி, தடை விதித்த உத்தரவுகளை, ரத்து செய்ய வேண்டும்.

இது தொடர்பாக, வழக்கு தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்துவோம். பொது இடங்களில், இறை மறுப்பு வாசகங்களுடன் கூடிய, ஈ.வெ.ரா., சிலைகளை அகற்ற, நீதிமன்றம் வாயிலாக சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement