நகராட்சிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் துாய்மை பணி: அதிகாரிகள் ஆலோசனை

தேனி: தேனி உள்ளிட்ட சில நகராட்சிகளில் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் துப்புரவு பணிகளை மேற்கொள்ள ஆலோசனைகள் நடந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகராட்சிகளில் தனியார் நிறுவனம் மூலம் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு சரிவர ஊதியம் தருவதில்லை, பி.எப்., தொகை பிடித்தம் செய்தாலும் உரிய வங்கி கணக்கில் வரவு வைப்பதில்லை என புகார்கள் எழுந்தன. மேலும் துாய்மை பணி சரிவர மேற்கொள்ளாததால் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் தனியார் நிறுவன ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நகராட்சி சுகாதாரப்பிரிவினர் கூறியதாவது: நகராட்சிகளில் துாய்மை பணிகளை மகளிர் சுய உதவிக்குழுவினர், ஆண்கள் சுய உதவி குழுவினர் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள தினசரி சம்பளம் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. நவ., 15க்குள் குழுக்களை தேர்வு செய்து, பணியாளர்களை உறுதி படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இம்மாத இறுதியில் இந்த முறை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டள்ளது என்றனர்.

Advertisement