தரைப்பாலம் கட்டும் பணி: விரைந்து முடிக்க வலியுறுத்தல்
திருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் தரைப்பாலம், மழைநீர் வடிகால் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் முகப்பு பகுதியை விரிவுபடுத்தி கட்டும் மேம்பாட்டு பணி, மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முதல் பிளாட்பார்ம் மேற்கு நுழைவு வாயில், டூவீலர் ஸ்டாண்ட் அருகே, மழைநீர் வடிகால், தரைப்பாலம் கட்டும் பணி கடந்த ஜூலையில் துவங்கியது.
சாலையை விட மேடான பகுதியாக இருந்ததால், முதலில் கான்கீரிட் சாலை அமைக்கப்பட்டது. தற்போது முகப்பு பகுதியில் மழை பெய்யும் போது தேங்கும் மழைநீர் வெளியேற வடிகால் கட்டும் பணி நடக்கிறது. மேற்கு, கிழக்கு என இரண்டு நுழைவு வாயில் உள்ள போது, கிழக்கு நுழைவு வாயில் தலைமை தபால் அலுவலகம், ஊத்துக்குளி ரோடு - மேம்பாலம் சந்திப்பை சென்றடைவதால், பெரும்பாலனோர் குமரன் நினைவிடம் அருகே உள்ள மேற்கு புற நுழைவாயில் வருகின்றனர்.
இரண்டு மாதத்துக்கும் மேலாக மழைநீர் வடிகாலுக்கு குழி தோண்டப்பட்டு, போக்குவரத்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை கண்டு கொள்ளாமல், இருக்கும் சிறிய சந்தில் கார்கள், ஆட்டோ உட்பட அனைத்து வாகனங்களும் உள்ளே புகுந்து, வெளியேறுகின்றன. இதனால், பீக்ஹவர்ஸில் நெரிசல் ஏற்படுகிறது. கிழக்குபுற நுழைவு வாயிலில் அகலமான கான்கீரிட் சாலை அமைக்கப்பட்டுள்ளதால், உள்ளே செல்ல, திரும்பி வெளியே வர வாகனங்கள் அதே சாலையை பயன்படுத்தும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும். மழைநீர்வடிகால் மற்றும் தரைப்பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.