‘112 – யை அழைத்தால் 3 நிமிடங்களில் மும்பை போலீஸ் வந்து விடுகின்றனர்’

புனே: மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக உள்ளார். உள்துறையையும் அவர் கவனித்து வருகிறார். மாநிலத்தில் போலீசாரின் அவசரகால சேவையை மேம்படுத்தும் வகையில், ‘டயல் 112’ என்ற சேவை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், புனே மாவட்டம் பிம்ப்ரி சிஞ்ச்வாட் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பல்வேறு திட்டங்களை முதல்வர் பட்னவிஸ் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு முறைகள் வாயிலாக, போலீசாரின் செயல்பாடுகள் வேகமடைந்துள்ளன. இதனால், அவசர அழைப்பு வந்தால் மூன்று நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விடுகின்றனர்.

போலீசார் வருவதற்குள் சம்பவம் முடிந்து விடும் எனும் ஹிந்தி சினிமா காட்சிகள் இனி மஹாராஷ்டிராவில் இல்லை. ஒரு சம்பவம் நடப்பதற்கு முன்பே அல்லது அது நடந்து கொண்டிருக்கும்போதே போலீசார் தலையிடுகின்றனர்.‘டயல் 112’ எண்ணுக்கு வரும் ஒவ்வொரு அழைப்பும் பதிவு செய்யப்படுகிறது. அழைப்பு வந்த நேரம், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற நேரம் என அனைத்து விபரங்களும் டிஜிட்டல் முறையில் பதிவாகின்றன. இதனால், போலீசார் தங்கள் செயல்பாடுகள் குறித்து தவறான தகவல்களை தெரிவிக்க முடியாது.

மேலும், அழைப்புகளை பதிவு செய்வதன் வாயிலாக, உதவி கோரியவர்களிடம் போலீசார் முறையாக நடந்து கொண்டனரா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement