ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெற்ற அலுவலர் மீது வழக்கு

கோவை: ஸ்வீட் கடைகளில், 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராமசாமி, 45, என்பவர் மீது வழக்கு பதியப்பட்டது.

கோவை மாவட்டம், புலியகுளம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராமசாமி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆறு ஸ்வீட் கடைகளில் ஆய்வு செய்து, 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ராமசாமி அலுவலகத்திற்கு நேற்று சென்ற இன்ஸ்பெக்டர்கள் எழிலரசி, பிரபுதாஸ் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர். அதில், ராமசாமி லஞ்சம் பெற்றது உறுதியானது. ஆறு கவர்களில் இருந்த, 60 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிந்தனர்.

மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ‘‘லஞ்சம் பெற்றது குறித்து விசாரித்து அறிக்கை தயாரித்து, உணவு பாதுகாப்பு துறை கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்படும். அவரது உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Advertisement