பள்ளி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் கோரிக்கை
ப.வேலுார்: ப.வேலுாரில் உள்ள பள்ளி சாலை, முக்கிய நிர்வாக மற்றும் வர்த்தக பகுதியாக விளங்கி வருகிறது. இப்பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை, கிளை நுாலகம், பேரூராட்சி அலுவலகம், எல்.ஐ.சி., அலுவலகம், திருமண மண்டபம், ஆறு தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள் மற்றும் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளிகள் உள்ளிட்டவை அடுத்தடுத்து அமைந்துள்ளன.
மேலும், பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால், இங்கு பொதுமக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் எப்போதும் அதிகமாக காணப்படும். அத்துடன், கபிலர்மலை, ஜேடர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள், மினி பஸ்களும் இச்சாலை வழியாகவே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இச்சாலையின் இருபுறமும் கார், மினி ஆட்டோ, வேன் உள்ளிட்ட, நான்கு சக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் சாலை குறுகலாகி, காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், ப.வேலுார் போக்குவரத்து பிரிவு போலீசாரிடம் பலமுறை புகாரளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, பள்ளி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வாகனங்களை அகற்றுவதோடு, போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.