சிக்கிள் செல் அனீமியாவை நொடியில் கண்டறிய எளிய தொழில்நுட்பம்: ஐ.ஐ.டி மும்பை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

1

மும்பை

கண்ணாடி ஸ்லைடில் ஒரு துளி ரத்தம் பரவும் வேகத்தையும், தூரத்தையும் கணக்கிட்டு, கடுமையான ரத்தசோகை (Anaemia) மற்றும் சிக்கிள் செல் அனீமியா நோயை (Sickle Cell Disease) மிகக் குறைந்த செலவில் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை, மும்பை ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வேதியியல் பொறியியல் துறையின் இந்த ஆய்வு முடிவுகள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற 'லேப் ஆன் எ சிப்' (Lab on a Chip) மருத்துவ அறிவியல் இதழில் வெளியாகியுள்ளன.

தொழில்நுட்பம் செயல்படும் விதம்

வழக்கமாக ஆய்வகங்களில் கண்ணாடி ஸ்லைடில் மனிதக் கைகளால் ரத்தத்தை படரச் செய்யும்போது அதன் தடிமன் ஆளுக்கு ஆள் மாறுபடும். இதனைத் தவிர்க்க, ஒரே சீரான கோணத்திலும் வேகத்திலும் ஸ்லைடை நகர்த்தி ரத்தத்தைப் படரச் செய்யும் சிறிய தானியங்கி கருவியை இக்குழுவினர் வடிவமைத்துள்ளனர். இதற்கு வெறும் ஒரு சிறிய துளி ரத்தமே போதுமானது.

சிக்கிள் செல் பாதிப்புள்ள ரத்தத்தில், ஆக்சிஜன் குறையும்போது சிவப்பு ரத்த அணுக்கள் விறைத்து அரிவாள் வடிவத்தை அடைகின்றன. ரத்த மாதிரியில் ஆக்சிஜனைக் குறைக்கும் சோடியம் மெட்டாபைசல்பைட் என்ற எளிய ரசாயனத்தைச் சேர்த்து, அது பரவும் தன்மையை ஒப்பிட்டுப் பார்க்கின்றனர்.

செலவு குறைவு

இப்பரிசோதனைக்குத் தேவைப்படும் கண்ணாடி ஸ்லைடின் விலை ஒரு ரூபாய்க்கும் குறைவு. இதற்கான ரசாயனமும் மிகக் குறைந்த விலையுடையதே. இத்தொழில்நுட்பம் ஐ.ஐ.டி., மும்பையின் ஸ்டார்ட் அப் நிறுவனமான 'ரியோஹீம் பிரைவேட் லிமிடெட்' (Rheoheme Pvt Ltd) நிறுவனத்திற்கு வணிகரீதியாக மாற்றப்பட்டுள்ளது.

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) ஒப்புதலுக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) மையங்களின் இறுதிக்கட்ட ஆய்வுக்குப் பிறகு இக்கருவி பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

Advertisement