போலி இணையதளங்களை நம்பி பொதுமக்கள் ஏமாறவேண்டாம்: உச்ச நீதிமன்ற பதிவகம் எச்சரிக்கை

1

புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை போல உருவாக்கப்பட்டு உள்ள போலி இணையதளங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என உச்ச நீதிமன்ற பதிவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உச்ச நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை போல், போலி இணைய தளங்களை சைபர் குற்றவாளிகள் உருவாக்கி மோசடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து சைபர் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தினர்.

உச்ச நீதிமன்றத்தின் அசல் இணையதளத்தை, அப்படியே நகலெடுத்தது போல், scigovinjudicial.com போன்ற 15க்கும் மேற்பட்ட போலி இணையதளங்களை சைபர் குற்றவாளிகள் உருவாக்கியது தெரியவந்தது.

உச்ச நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள், சட்டப்பூர்வ விபரங்களை தேடி இணைய தளத்தை நாடும் மக்கள், இந்த போலி பக்கங்களை நம்பி ஏமாறுகின்றனர். இது தவிர, உச்ச நீதிமன்ற போலி இணையதளங்களின் லிங்கை கிளிக் செய்து, தங்களின் வங்கி விபரங்கள், கடவுச்சொற்களை பகிர்ந்தவர்கள் தங்களின் ரகசிய தரவுகளை இழந்ததாகவும் புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து, அந்தப் போலி இணையதளங்களை முடக்கும் நடவடிக்கையில், உச்ச நீதிமன்ற பதிவகம் உடனே நடவடிக்கை எடுத்துள்ளது. இவற்றை உருவாக்கிய நபர்களை கண்டறியும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்கள், மேற்கொண்டு பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் உச்ச நீதிமன்ற பதிவகம், பொது எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது.

போலி இணையதளங்கள் குறித்து ஏற்கனவே, கடந்த ஆண்டு ஜூலையிலும், இந்த ஆண்டு ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களிலும் உச்ச நீதிமன்ற பதிவகம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement