16 இடங்களில் இருந்து நேரடி பஸ்கள்: முன்பதிவு பயணியருக்கு புதிய வசதி
சென்னை: தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு, முன்பதிவு செய்த பயணியருக்காக, சென்னையில் 16 இடங்களில் இருந்து, நேரடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணியர் வசதிக்காக, 14 இடங்களில் முன்பதிவு மையங்கள் இன்று தொடங்கப்படுகிறது.
இதுகுறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில், சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பேருந்துகளை சீராக இயக்குவதிலும் சிக்கல் நிலவுகிறது.
இதனால், பேருந்துகளை பிரித்து இயக்குவதில் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.
இன்று முதல் 7ம் தேதி வரை வழக்கமான 6,573 பேருந்துகளுடன், கூடுதலாக 9,086 பேருந்துகள் என, மூன்று நாட்களில், 15,659 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பயணியர் வசதிக்காக, கிளாம்பாக்கத்தில் 10; கோயம்பேடு, மறைமலைநகரில் தலா இரண்டு என, 14 முன்பதிவு மையங்கள் இன்று திறக்கப்படும்.
கிளாம்பாக்கம், மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையங்கள், கோயம்பேடு, மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து, பல்வேறு பேருந்துகள் இயக்கப்படும்.
சொந்த ஊர்களுக்கு கார்களில் செல்வோர், தாம்பரம், பெருங்களத்துார் வழித்தடத்தைத் தவிர்த்து, பழைய மாமல்லபுரம் சாலை, கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலுார் வெளிவட்டச் சாலை வழியாகச் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
முதன்முறையாக திருவான்மியூர், ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், சிறுசேரி, அடையாறு, பிராட்வே, எழும்பூர், அம்பத்துார், தரமணி, தீவுத்திடல், கிண்டி, வேளச்சேரி, அசோக் பில்லர், பூந்தமல்லி, சைதாப்பேட்டை என, 16 இடங்களில் இருந்து முன்பதிவு பயணியருக்கு நேரடி பஸ்கள் இயக்கப்படும்.
கிளாம்பாக்கம் செல்வதற்கான பேருந்து வசதி குறித்து, பயணியருக்கு செயலி, இணையதளம் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஐ.டி., நிறுவனங்கள், பெரிய தொழிற்சாலைகளில் இருந்து, 40 முதல் 50 பேர் பயணித்தால், அங்கிருந்தே சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
கிளாம்பாக்கத்தில் செல்போன் சிக்னல் பிரச்னையைத் தீர்க்க, இந்த முறை இரண்டு அல்லது மூன்று தற்காலிக சிக்னல் பூஸ்டர் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்