திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு

அரூர்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுாரை சேர்ந்த, 33 வயது பெண்ணும், கம்பைநல்லுார் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த சித்தார்த்தன், 28, என்பவரும் கடந்த, 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சித்தார்த்தன்,

அப்பெண்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, கடந்த ஓராண்டாக அப்பெண்ணை தனிமையில் சந்தித்து வந்துள்ளார்.மேலும், அப்பெண்ணிடம் இருந்து, 7 பவுன் நகை மற்றும் பணம், கார், டூவீலர் ஆகியவற்றை வாங்கி உள்ளார். இதனிடையே, தன்னை திருமணம் செய்து கொள்ள அப்பெண் வலியுறுத்தியபோது, பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும், இது தொடர்பாக எந்த பிரச்னையும் செய்யக்கூடாது என, சித்தார்த்தன் கூறியுள்ளார். இது குறித்து இருகுடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்திய போதும், சித்தார்த்தன் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தன்னை திருமணம் செய்வது கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய சித்தார்த்தன் மீது நடவடிக்கை எடுக்க, அரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், பெண் புகார் அளித்தார். அதன்படி, சித்தார்த்தன் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement