கீழ்பவானி வாய்க்காலுக்கு வரும் 15ல் நீர் திறக்க வலியுறுத்தல்

ஈரோடு:கீழ்பவானி வாய்க்காலுக்கு வரும் 15ல் தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்த, கீழ்பவானி பாசன பயனாளிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: பவானிசாகர் அணையில் திறக்கப்படும் பாசன நீர் மூலம், கீழ்பவானி பாசன பகுதியில் முதல் மற்றும் இரண்டாம் மதகு பாசன பகுதியில் தலா, ஒரு லட்சத்து, 3,500 ஏக்கர் என, 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசனம் பெறுகின்றன.

நீர்வளத்துறையின் விருப்பு, வெறுப்பு, ஆதாய அடிப்படையில் கோடையில் கூட சில பாசனங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், கீழ்பவானி பாசன பகுதிக்கு இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. கீழ்பவானியில் ஒரு பகுதிக்கு மட்டும், 15 நாட்கள் உயிர் நீர் திறக்கப்பட்டது. மறுபகுதியில் உள்ள, ஒரு லட்சத்து, 3,500 ஏக்கருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நீர் திறக்கப்படவில்லை.

தற்போது பவானிசாகர் அணையில், 14.58 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளது. மழைக்கு ஏற்ப நீர் வரத்து உயர்ந்து, குறைந்து வருகிறது. வேறு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை. நீர் மின் அணைகளிலும், அதிகளவில் தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே, இதனை கணக்கிட்டு வரும், 15ல் கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டியது கட்டாயமாகும்.

தற்போது திறக்கப்படும் தண்ணீர் மூலம் எள், கடலை, மக்காசோளம், பயறு வகைகள், சிறு தானியங்கள் போன்றவை சாகுபடி செய்யலாம். எள் பயிருக்கு, 9 டி.எம்.சி., - கடலை பயிருக்கு, 12 டி.எம்.சி., தண்ணீர் தேவை. இதனை கணக்கிட்டு நீர் வளத்துறை முன்னதாகவே அறிவிப்பு செய்து, தண்ணீரை வரும், 15ல் திறக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வர்.

பருவ மழை இல்லாத நிலையிலும், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால், விவசாயத்துடன், நிலத்தடி நீரும் மேம்படும். நீர் திறக்க மறுத்தால், கீழ்பவானி பாசனப்பகுதி பாலைவனமாகும். இவ்வாறு கூறினார்.

Advertisement