டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலி முதலியார்பேட்டையில் சோகம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிவேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலில், முதலியார்பேட்டையை சேர்ந்த வாலிபர் ஒருவர் இறந்தார்.

புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. நகர பகுதியில் அதி தீவிரமாக டெங்கு பரவி வருவதால், தினந்தோறும் 15 முதல் 20 பேர் டெங்கு பாதிப்புடன், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, 100க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டது. அவர், கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 18ம் தேதி கதிர்காமம் மருத்துவமனையில் இருந்து வெளியேறி, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை இறந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தீவிரம் காட்டுமா அரசு: புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை ஒருங்கிணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர். டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட இடத்தில், டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபடுவர்.

இந்தாண்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில், சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை ஒருங்கிணைந்து மேற்கொள்ளவில்லை.

டெங்கு ஒழிப்பு பணியில் அலட்சியம் காரணமாக, வாலிபர் ஒருவர் இறந்துள்ளார். ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இனியாவது புதுச்சேரி அரசு கண் விழித்து, டெங்கு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

ரத்த வங்கி பிசி: டெங்கு பாதித்து பிளேட்லெட் குறையும் நோயாளிகளுக்கு, தினசரி 2 முதல் 4 யூனிட் பிளேட்லெட் செலுத்தப்படுகிறது. சிலருக்கு 20 யூனிட் வரை பிளேட்லெட் செலுத்தப்படுகிறது. டெங்கு பாதித்தவருக்கு பிளேட்லெட் அளிக்க, அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்த தானம் அளிக்க ஏராளமானோர் வருவதால், ரத்த வங்கி படு பிசியாக உள்ளது.

கண் துடைப்பிற்காக: டெங்கு பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் வீட்டிற்கு சுகாதாரத்துறையின் அலுவலர்கள், ஆஷா பணியாளர்கள் நேரில் சென்று அங்கு டெங்கு உருவாக்கும் கொசு உள்ளதா என ஆய்வு செய்து, அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், டெங்கு பாதித்த நபர் 5 முதல் 7 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின், அவரது வீட்டிற்கு செல்லும் சுகாதார பணியாளர்கள், நோயாளியின் டிஸ்சார்ஜ் சம்மரியுடன் நிற்க வைத்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டு, அங்கிருந்து சென்று விடுகின்றனர்.

Advertisement