தி ஹோம் ஸ்கூல் பள்ளியில் பாரம்பரிய கலைப் போட்டிகள் மாணவ, மாணவியர் உற்சாகம்

திருப்பூர்: திருப்பூர் ‘தி ஹோம் ஸ்கூல்’ பள்ளி தாளாளர் சக்திதேவியின் தந்தை காளியப்பா நினைவாக, ஆண்டுதோறும் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது.

அவ்வகையில், நடப்பாண்டு மூன்று நாள் நடைபெற்ற கலைத் திருவிழாவில், தமிழர்களின் பாரம்பரியக் கலைகளைப் போற்றும் வகையிலும், மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

முதல் நாளில் நடைபெற்ற பூமாலை தொடுக்கும் போட்டியில் 109 பேர் பங்கேற்று அழகிய பூமாலைகளைத் தொடுத்தனர். இரண்டாம் நாள் தென்னை ஓலைக் கைவினைப் போட்டி நடைபெற்றது. இதில் 121 பேர் தென்னை ஓலைகளைக் கொண்டு பல்வேறு அழகிய, புதுமையான கைவினைப் பொருட்களை உருவாக்கினர். மூன்றாம் நாள் நடைபெற்ற பாரம்பரிய கோலப் போட்டியில் பெற்றோர்கள் 122 பேர் பங்கேற்றனர்.

மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.7 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பள்ளித் தாளாளர் சக்திதேவி, முதல்வர் ராஜ்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதுடன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் இக்கலைத் திருவிழா அமைந்தது. மேலும், பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான நல்லுறவையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் வகையில் விழா அமைந்ததாகப் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement