பல்லாங்குழி சாலையில் மரக்கன்று நடவு போராட்டம்
பல்லடம்: பல்லடம் அருகே பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகக் காணப்படும் சாலையில், மரக்கன்றுகளை நடவு செய்து போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட அல்லாளபுரம் -– காளிநாதம்பாளையம் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் மிகவும் சேதமடைந்துள்ளது. இந்த சாலையை அய்யம்பாளையம், காளிநாதம்பாளையம், பொன் நகர், எஸ்.ஆர். நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
விவசாயப் பகுதியாக உள்ள இங்கு, காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், பள்ளி வாகனங்கள் மற்றும் பனியன் நிறுவன வாகனங்கள் என தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. பல்லடம் - திருப்பூர் சாலையை இணைக்கும் முக்கிய சாலையாகவும் இது உள்ளது.
சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால், அதனை சீரமைக்க வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் போராட்டம் அறிவிக்கப்பட்டது. தேர்தல் காரணமாக போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், தேர்தல் முடிந்து ஆறு மாதங்களாகியும் சாலை சீரமைக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், ‘‘சேதமடைந்த சாலையை சீரமைக்க முடியாது. புதிதாக அமைக்க வேண்டும் என்றும் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். சாலையை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், சாலையை பராமரிக்காத அதிகாரிகளைக் கண்டித்து வரும் 30ம் தேதி, சாலையில் உள்ள பள்ளங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றனர்.
மேலும்
-
கூட்டணி ஆட்சி அமைக்க வாருங்கள்; இஸ்ரேல் தேர்தலில் தோற்ற நெதன்யாகு கட்சிக்கு எதிர்க்கட்சி அழைப்பு
-
விவசாயிகள் துயர் துடைக்க உடனே நிவாரணம் அறிவியுங்கள்: உதயநிதி வலியுறுத்தல்
-
இரு வெவ்வேறு விபத்தில் சோகம்; குஜராத்தில் 7 பேர், ராஜஸ்தானில் 9 பேர் பலி
-
மீன் பிடி வலை, உபகரணங்கள் விற்பனை மையம் துவக்கம்
-
சாக்கடை கால்வாயை சீரமைக்க கோரிக்கை
-
கான்கிரீட்களை சுத்தம் செய்யாமல் சாலையில் வெள்ளைக்கோடு