அரசு பள்ளி சத்துணவு மைய உதவியாளர்களுக்கு பயிற்சி

பாலக்கோடு: பாலக்கோடு பி.டி.ஓ., அலுவலகத்தில் அரசு பள்ளி சத்துணவு மைய உதவியாளர்களுக்கு, புத்தாக்க பயிற்சி நேற்று நடந்தது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் சார்பில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் அரசு பள்ளி சத்துணவு மைய சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கான ஒருநாள் புத்தாக்க பயிற்சி நேற்று நடந்தது. பயிற்சிக்கு பி.டி.ஓ., ரவி தலைமை வகித்தார். இதில், பாலக்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம், துணை பி.டி.ஓ., பூமாரிகண்ணன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக மேற்பார்வையாளர் பாரதி, ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டு புத்தாக்கப் பயிற்சியின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினர். மேலும், சுகாதாரமான முறையில் சமைத்த உணவுகளை பாதுகாப்பாக வைத்து, மாணவர்களுக்கு வழங்குதல் போன்ற நடைமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. இதில், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement