லஞ்சத்தை ஒழிக்க அதிகாரிகள் அனுமதிப்பது கிடையாது! மாநகராட்சி கான்டிராக்டர் பகிரங்க குற்றச்சாட்டு

கோவை:அரசு அலுவலகங்களில் லஞ்சமே இருக்க கூடாது என்று முதல்வர் விஜய் சொல்கிறார். ஆனால், லஞ்சம் இல்லாத நிர்வாகம் நடத்த விடாமல் தடுத்துக் கொண்டிருப்பதே அதிகாரிகள் தான், என்று கோவை மாநகராட்சி கான்டிராக்டர் ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

திருவேங்கடம் என்ற ஒப்பந்ததாரர் நேற்று பத்திரிகையாளர் சங்கத்தில் பேட்டி அளித்தபோது, இதை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

நான் 5 ஆண்டுகளாக மாநகராட்சியில் பல பணிகளை கான்டிராக்ட் எடுத்து செய்து வருகிறேன். த.வெ.க. ஆட்சி வந்த பிறகு அரசு நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும்; அரசு அலுவலகங்களில் லஞ்சமே இருக்கக் கூடாது என முதல்வர் விஜய் கூறுகிறார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் நிர்வாகம் நடத்த அதிகாரிகள் ஒத்துழைப்பது இல்லை. அதனால் மேயரும் 2 சதவீதம் கமிஷன் பார்ட்டி பண்டாக தர வேண்டும் என்று கேட்கிறார். திமுக ஆட்சியில் எல்லா மட்டத்திலும் கொடிகட்டி பறந்த பார்ட்டி பண்ட் என்கிற நடைமுறையை ஒழித்து விட்டதாக அரசு சொல்கிறது. ஆனால் கோவை மாநகராட்சியில் அது ஒழியவில்லை. மேயருக்கு பார்ட்டி பண்ட் கொடுத்தால் மட்டுமே கான்டிராக்டர்களுக்கு ஜாப் ஆர்டர் வழங்குகின்றனர்.

லஞ்சம் கொடுக்கவில்லை என்றால், அந்த வேலையை ரத்து செய்கிறார்கள். பிறகு அதே வேலைகளை பழைய கான்டிராக்டர்களை வைத்து செய்வதற்கு நீட்டிப்பு கொடுக்கிறார்கள். இப்படி ஏராளமான பூங்கா, கழிப்பறை, பள்ளி பராமரிப்பு வேலைகள் முடங்கி கிடக்கின்றன.

டெண்டர் விடுவதில் ஒளிவு மறைவே கூடாது என விஜய் அரசு எச்சரித்தது. ஆனாலும், சிண்டிகேட் போட்டு டெண்டர் செட்டிங் செய்கிறார்கள். அதாவது, நிர்வாக செலவுக்கு என்று ஒவ்வொரு டெண்டரிலும் குறிப்பிட்ட சதவீதம் அனுமதிப்பது வழக்கம். பல கான்டிராக்டர்கள் அந்த செலவு எவ்வளவு என குறிப்பிட வேண்டிய இடத்தில், சைபர் போடுகின்றனர். ஒரு பைசா கூட நிர்வாக செலவே கிடையாது என்பது அதன் அர்த்தம்.

ஜீரோவுக்கு மதிப்பே இல்லை. ஆனால், அதையும் ஒரு மதிப்பாக எடுத்துக் கொண்டு, குலுக்கல் முறையில் டெண்டர் நடத்துகிறார்கள். சிண்டிகேட் போட்டு டெண்டர் என்பது, கான்டிராக்டர்கள் தங்களுக்குள் பேசி வைத்து தொகை குறிப்பதாகும். உதாரணமாக, 4 கான்டிராக்டர்களை அழைத்து அதிகாரிகள் குலுக்கல் நடத்துகிறார்கள் என்றால், 4 பேருக்கும் ஆளுக்கு ஒரு வேலை கிடைக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள்.

மாநகராட்சியில் 190 ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். லஞ்சம் கொடுக்கும் 6 நிறுவனங்களுக்கு மட்டுமே திரும்ப திரும்ப வேலை கொடுக்கின்றனர். இது சிண்டிகேட் செட்டிங். கடந்த 6 மாதங்களில் ரூ.300 கோடிக்கு டெண்டர் விட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்காத கான்டிராக்டர்கள் எந்த ஆர்டரும் பெற முடியவில்லை. நான் சொல்வது தான் அவர்கள் கருத்தும். ஆனால், வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

முதல்வர் முதல் கமிஷனர் வரை பலருக்கும் புகார் அனுப்பினேன். நடவடிக்கை இல்லை. ஏனென்றால், அதிகாரிகள் விடமாட்டார்கள்.

இவ்வாறு திருவேங்கடம் கூறினார்.

கான்டிராக்டர் திருவேங்கடம் குற்றச்சாட்டு மேயர் ரங்கநாயகியிடம் நமது நிருபர் கருத்து கேட்டார்.

மேயர் கூறியதாவது:

திருவேங்கடம் என் வார்டிலும் சில வேலைகளை செய்தார். அதன் தரம் திருப்தியாக இல்லை என்பதால், நிதிக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டேன். அதனால் என் மீது கோபத்தில் இருக்கிறார். டெண்டர் விஷயங்களில் நான் தலையிடுவதே இல்லை. திருவேங்கடம் சொல்வது உண்மையாக இருந்தால், மற்ற கான்டிராக்டர்களும் அவருடன் பேட்டி அளித்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை என்று அவரிடமே கேளுங்கள்.இவ்வாறு மேயர் கூறினார்.

அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, குற்றச்சாட்டு உண்மை என்றால்,

அதிகாரிகள் பெயரையும் திருவேங்கடம் சொல்லி இருக்கலாமே என்றனர்.

Advertisement