'குடு குடு' வயசு... 'கொடு கொடு' மனசு: இணையத்தில் இணைந்த 'இதய' கமலங்கள்

வயது அறுபதை கடந்தாலே உடலில் இங்கே வலிக்குது... அங்கே வலிக்குது... என இயலாமையால் முனகி, மூச்சு வாங்குவோரிடையே மதுரையில் 1963ல் பள்ளித் தோழிகளாக படித்தவர்கள், இன்று 80 வயதில் இணையத்தில் இணைந்து, இயலாதோருக்கு உதவுவது 'சபாஷ்' சொல்ல வைக்கிறது.

துள்ளித் திரிந்த பள்ளி நாட்களை திரும்ப பெற முடியுமா என்ற ஏக்கம் இருந்த நிலையில், அதே உற்சாகம் குறையாமல், இன்று 'வாட்ஸ் ஆப்'பில் ஒன்றுகூடி உணர்வுகளை பகிர்ந்து கொள்கின்றனர். நேரில் சந்தித்து நெடுநேரம் உரையாடுவது, இன்பச் சுற்றுலா, இயலாதோர் தேவையை நிறைவேற்றுவது என வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி வருகின்றனர்.

மதுரை பழைய குயவர் பாளையம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் 1963ல் 10ம் வகுப்பு படித்த மாணவியர்தான் அந்த மதுரை மகளிர். அன்று படித்த 35 பேரில் தற்போது 17 பேர் இணைப்பில் உள்ளனர். 6 பேர் இறந்து விட்டனர்; 3 பேரை கண்டறிய முடியவில்லை. குடும்ப சூழல், இயலாத, விருப்பமில்லை என வேறு சிலர்.
Latest Tamil News
இணைந்து சேவையாற்றுவோரை ஒருங்கிணைக்கும் மதுரையை சேர்ந்த சி.சாருமதி சொல்வதை படியுங்களேன்: தோழியர் ஆஸ்திரேலியா, மும்பை, சென்னை என பல பகுதிகளில் வசிக்கின்றனர். ஆசிரியைகள், டாக்டர்கள், தொழில் செய்பவர்கள், இல்லத்தரசிகள் என பலரும் குழுவில் உள்ளனர். அவரவர் விருப்பப்படி இயலாதோருக்கு கல்வி, மருத்துவத்துக்கு தனித்தனியாக உதவி வந்தனர். 2010ல் தோழி ஒருவரது இல்ல திருமணத்தில் நாங்கள் 'வாட்ஸ்ஆப்'ல் ஒன்றிணைந்தோம். கோவையில் வசிக்கும் தோழி உமா யோசனைப்படி இணைந்து எங்கள் சேவை தொடர்கிறது. ஆண்டுக்கு 2 முறை 'கெட் டுகெதர்' ஆக மதிய உணவில் கூடி மகிழ்வோம். 75வது வயதை சிறப்பாக கொண்டாடினோம்.

மதுரையில் ஆதரவற்றோர் இல்லத்துக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பில் பெரிய மிக்ஸி, காது கேளாத மாணவியருக்கு காது கேட்கும் கருவி வழங்கினோம். சில மாதங்களுக்கு முன் நேபாள நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு மதுரை இந்திய செஞ்சிலுவை சங்கம் மூலம் ரூ.30 ஆயிரத்தை கலெக்டரிடம் வழங்கினோம். அவரவர் பிறந்தநாள், திருமண நாட்களில் உதவுகிறோம்.

தற்போது '1963 சர்வீஸ் குரூப்' என்ற பெயரில் இயங்கி வருகிறோம். இந்தச் சேவையுடன் நாங்களே அவ்வப்போது சுற்றுலாவும் சென்று வருகிறோம். சென்னை, மகாபலிபுரம், திருவனந்தபுரம், அந்தமான், சிங்கப்பூர் என வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளோம். சமீபத்தில் எங்கள் 10ம் வகுப்பு கணித ஆசிரியை பிலோமினாளை சந்தித்து மகிழ்ந்தோம்.

தினமும் வாட்ஸ்ஆப்பில் குட்மார்னிங் சொல்வோம். யாராவது சொல்லவில்லை என்றால் அவர்களின் உடல்நலம் விசாரித்து அறிவோம். எங்கள் செயல்பாடுகளுக்கு கணவர் முதல் கொள்ளுப் பேரன், பேத்தி வரை ஊக்கமளிப்பது எங்களை உற்சாகமாக வைத்துள்ளது என்றார்.

இவர்களை வாழ்த்த 90033 97738.

Advertisement