ஆசிரியர் நினைவாக நுாலகம் அமைப்பு

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அடுத்த வெள்ளக்கல்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி. ஓய்வு பெற்ற தமிழாசிரியரான இவர், சிறந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளராகவும் இருந்தார். இவரது மனைவி பொன்னம்மாளும் ஓய்வு பெற்ற ஆசிரியர்.

இவர்கள் இருவரும் தங்களது வாழ்நாளில் பல்வேறு இலக்கியம் மற்றும் கல்வெட்டு ஆய்வுகளுக்காக, ஆயிரக்கணக்கான அரிய புத்தகங்களை வாங்கி, வெள்ளக்கல்பட்டியில் உள்ள தங்களது வீட்டில் சேகரித்து வைத்திருந்தனர்.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக துரைசாமி மற்றும் பொன்னம்மாள் ஆகிய இருவரும் காலமாகிவிட்டனர். அதன்பின், தங்களது பெற்றோர் ஆசையோடு சேகரித்த ஆராய்ச்சி மற்றும் தமிழ் இலக்கிய புத்தகங்கள் வீட்டிலேயே முடங்கிவிடாமல், பொதுமக்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பயன்பட வேண்டும் என, அவர்களது வாரிசுகள் முடிவு செய்தனர்.

அதன்படி, அமெரிக்காவில் வசித்து வரும் இவர்களது மகன் செந்தில் மற்றும் அரசு ஆசிரியராக பணியாற்றி வரும் மகள் ஜோதிக்கண்மணி ஆகியோர் இணைந்து, நாமகிரிப்பேட்டையில் ஒரு வீட்டில், 'துரைசாமி-பொன்னம்மாள் நினைவு நுாலகம்' அமைத்துள்ளனர்.

முதற்கட்டமாக, 5,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு, இந்த நுாலகத்தின் திறப்பு விழா, நேற்று நடந்தது. இதில், பல்வேறு துறைகளை சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மறைந்த ஆசிரியர் துரைசாமியின் முன்னாள் மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர். தற்போது, ஆரம்ப கட்டமாக தினமும் குறிப்பிட்ட நேரத்திலும், விடுமுறை நாட்களில் முழு நேரமும் இந்த நுாலகம் திறந்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement