பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த ஆசிரியர் மன்றம் தீர்மானம்

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில், ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் நலன் மற்றும் கோரிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்கான ஒன்றிய மூத்தோரணி அமைப்பு கூட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நடந்தது.

மாவட்ட மூத்தோரணி துணை அமைப்பாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில், கடந்த, 2024 மற்றும், 2025-ம் ஆண்டு மே மாதங்களில் மறு நியமனத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள் உஷாராணி, ராமராஜூ, தனம், ஜீனத்பீ ஆகியோருக்கு நிலுவையில் உள்ள மே மாத ஊதியத்தை உடனடியாக பெற்று வழங்க வேண்டும். பள்ளி பார்வையின் போது ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் பேசும் நாமகிரிப்பேட்டை வட்டார கல்வி அலுவலரின் செயல்பாடுகளை கண்டிப்பது, தமிழக அரசின் உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, 70 வயது நிறைவடையும்போது, 10 சதவீதமும், 80 வயது தொடங்கும் நாளில் மேலும், 10 சதவீதமும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கம்முடேசன் பிடித்தம் செய்யும் காலத்தை, 15 ஆண்டிலிருந்து, 11 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். மேலும், ஓய்வூதிய ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 25ல் நாமகிரிப்பேட்டை வட்டார கல்வி அலுவலரிடம் முறையீடு செய்வது எனவும் முடிவுசெய்யப்பட்டது.

தொடர்ந்து நடந்த நிர்வாகி கள் தேர்வில், நாமகிரிப்பேட்டை ஒன்றிய மூத்தோரணி தலைவராக சவுந்தரராஜன், துணை தலைவராக மணி, செயலாளராக சாந்தி, துணை செயலாளராக உஷாராணி, பொருளாளராக செங்கோட்டுவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினராக தனமணி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement