'ஹோம் கம்போஸ்ட்' முறையில் இயற்கை உரம் தயாரிப்பு: நாமக்கல் மாநகராட்சியில் கவுரவிப்பு

நாமக்கல்:நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில், துாய்மையான நகரத்தை உருவாக்குவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவு களை குறைத்தல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில், பொதுமக்களிடையே வீட்டிலேயே மக்கும் கழிவுகளை உரமாக மாற்றும், 'ஹோம் கம்போஸ்ட்' முறையை தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறது.

'ஹோம் கம்போஸ்ட்' என்பது, வீடுகளில் தினசரி உருவாகும் காய்கறி மற்றும் பழங்களின் கழிவுகள், உணவுக்கழிவுகள், இலைகள், பூக்கள் போன்ற மட்கும் கழிவுகளை தனியாக சேகரித்து, முறையாக மட்க செய்து, இயற்கை உரமாக மாற்றும் எளிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறையாகும்.

நாமக்கல் மாநகராட்சியில், மொத்தம், 78,416 குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகளில் இருந்து தினசரி உருவாகும் மட்கும் கழிவுகளில், 35 டன் அளவிலான மட்கும் கழிவுகள், மாநகராட்சியால் சேகரிக்கப்பட்டு, உரமாக்கும் செயல்முறைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில், நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில், 'ஹோம் கம்போஸ்ட்' முறையை சிறப்பாக பின்பற்றி, பயன்படுத்தி வரும் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், பாராட்டு விழா நடந்தது. மாநகராட்சி கமிஷனர் செல்வபாலாஜி தலைமை வகித்தார். 'ஹோம் கம்போஸ்ட்' முறையை சிறப்பாக மேற்கொண்டு வரும், ஐந்து பேருக்கு, பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மாநகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், சுப்ரமணியன், ஜான்ராஜா, நந்தினி, அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement