பள்ளி வேன் மீது மோதிய தனியார் பஸ் காயத்துடன் உயிர் தப்பிய குழந்தைகள்

புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி அருகே எஸ்.ஆர்.சி., தனியார் பள்ளிக்கு சொந்தமான ஒரு வேன் நேற்று மாலை பள்ளி நேரம் முடிந்து, 5:00 மணியளவில் குழந்தைகளுடன் புறப்பட்டது.

பு.புளியம்பட்டி அவிநாசி சாலை மின்வாரிய அலுவலகம் அருகே குழந்தைகளை இறக்கி விட, சாலையோரம் நின்றிருந்தது. அப்போது திருப்பூரில் இருந்து அதிவேகமாக வந்த எஸ்.எஸ்.டி., தனியார் பஸ், பள்ளி வேன் பின்புறமாக மோதியது. இதில் பள்ளி வேனில் இருந்த ஆறு குழந்தைகள் சிறு காயங்களுடன் தப்பினர்.

கண் முன்னால் நடந்த சம்பவத்தை பார்த்து, குழந்தைகளுக்காக காத்திருந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். புன்செய்புளியம்பட்டி போலீசார் காயமடைந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் தனியார் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. பள்ளி வேன் பின்புறம் சேதமடைந்தது. விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரான சத்தியமங்கலத்தை சேர்ந்த பிரசாந்த், 29, தப்பி ஓடிவிட்டார். அதிவேகத்தில் இயக்கும் பஸ் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெற்றோர் மற்றும் பொதுமக்கள், போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement