போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் பாதியில் நிற்கும் ஆர்.டி.ஓ., கட்டட பணி

கரூர்:நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கரூர்

கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) அலுவலக, புதிய கட்டட பணிகள் பாதியில்

நிறுத்தப்பட்டுள்ளன.

கரூர், வாங்கல் சாலையில், 100 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த கட்டடம் இருந்தது. அதில், கரூர் கோட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டது. இதற்கு முன்பாக, அதே கட்டடத்தில் கடந்த, 1993 முதல் சில ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர் அலுவலகமும் செயல்பட்டது.

பழுதடைந்த கட்டடம்

தற்போது, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடம் பழுதடைந்தது காரணமாக, பத்திரப்பதிவு கட்டடம், வெங்கமேடு எஸ்.பி., காலனி பஸ் ஸ்டாப் அருகே மாற்றப்பட்டுள்ளது. கரூர் நகரில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனை, காந்திகிராமத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இதனால் கோட்டாட்சியர் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனையில், காலியாக இருந்த அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்து கட்டடம் இடிக்கப்பட்டு, மூன்று கோடியே, 50 லட்ச ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டும் பணி, கடந்தாண்டு இறுதியில் தொடங்கியது.

சிதிலமடையும் துாண்கள்

ஆனால், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், புதிதாக கட்டப்பட்ட சுவர்கள், துாண்கள் மழை மற்றும் வெயிலில் சிதிலம் அடையும் நிலை உள்ளது. மேலும் குறுகிய இடமான, பழைய அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் செயல்படும் அவல நிலை உள்ளது. கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலின்போது, கோட்டாட்சியர் அலுவலகம், (அவரச சிகிச்சை பிரிவு கட்டடம்) கரூர் தொகுதி தேர்தல் அலுவலக மாகவும் செயல்பட்டது.

இடவசதியின்றி தவிப்பு

அப்போது கரூர் தொகுதியில், 79 பேர் போட்டியிட்டதால், வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது, போதிய இடவசதி இல்லாமல் வேட்பாளர்கள், ஏஜென்ட்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் சிரமப்பட்டனர். இந்நிலையில், காலியாக உள்ள கரூர் சட்டசபை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அப்போது, அவசர சிகிச்சை பிரிவில் செயல்படும் கோட்டாட்சியர் அலுவலகமே, தேர்தல் அலுவலகமாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. அப்போது, கடந்த மே மாதம் ஏற்பட்ட சிக்கல் மீண்டும் தொடரும். எனவே, கட்டட பணிக்கான நிதியை, ஒதுக்கீடு செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

இதுகுறித்து, கரூர் பொதுப்பணித்துறை (கட்டடம்) செயற்பொறியாளர் செல்வராஜிடம் கேட்ட போது, '' கட்டட பணியை துவக்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில், கோட்டாட்சியர் புதிய அலுவலக கட்டட பணி தொடரும்,'' என்றார்.

Advertisement