தனியார் பள்ளிகளுக்கு ரூ.400 கோடி ஆர்.டி.இ., கட்டணம் நிலுவை
மதுரை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு கிடைக்க வேண்டிய ஆர்.டி.இ., கல்விக் கட்டணம் இன்னும் கிடைக்கவில்லை என நிர்வாகிகள் புலம்புகின்றனர்.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.இ., ) கீழ் தமிழகத்தில் 8 ஆயிரம் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., முதல் 8 ம் வகுப்பு வரை 4 லட்சம் மாணவர்கள் இலவசமாக படிக்கின்றனர். இவர்களுக்கான கட்டணத்தை அரசு, அந்தந்த ஆண்டிலேயே இரண்டு தவணையாக பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். ஆனால் 2025 க்கான தொகையை இதுவரை பள்ளிகளுக்கு வழங்கவில்லை. இதனால் பள்ளிகளை நடத்துவதில் நிர்வாக ரீதியாக சிக்கல் ஏற்படுவதாக தாளாளர்கள் புலம்புகின்றனர்.
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது: இக்கட்டணத்தை மாநில அரசு வழங்கி, அத்தொகையை பின் மத்திய அரசிடம் பெற்றுக்கொள்ளும் நடைமுறை உள்ளது. தி.மு.க., ஆட்சியில் மத்திய அரசுடனான மோதல் போக்கால் இத்தொகை கிடைக்கவில்லை. மாநில அரசு சமாளித்தது. தற்போது த.வெ.க., ஆட்சியிலும் அதேநிலை நீடிக்கிறது. ரூ.400 கோடிக்கும் மேல் நிலுவை உள்ளது. நிதி ஒதுக்குவதற்கான 'டீம் விசிட்' கூட இதுவரை பள்ளிகளில் நடக்கவில்லை. 4 லட்சம் ஏழை மாணவர்கள் நலன் கருதி முதற்கட்ட தவணையாவது பள்ளிகளுக்கு விடுவிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.