காவல்துறையில் சர்விவல் டவர் திருவண்ணாமலையில் அறிமுகம்

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்ட காவல் துறையினரால் தயாரிக்கப்பட்ட சர்விவல் டவர் மூலம் திருவண்ணாமலை தீபத் திரு விழாவில் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

இந்தியாவிலேயே முதல் முதலாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆயுதப்படை டி.எஸ்.பி., ஞானவேல் உழைப்பில் தொழில்நுட்ப உதவியுடன் நவீன மயமான ‘சர்விவல் டவர்’ தயாரிக்கப்பட்டுள்ளது. 3 அடிக்கு 3 அடி அளவுள்ள பெட்டியில் செயல்படும் மொபைல் காவல் நிலையமாகவே இதை பயன்படுத்தலாம்.

திருவிழா காலங்களில் கூடும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நடைபெறும் திருட்டு சம்பவங்களைத் தடுக்க தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டியில் 9 அடி உயரமுள்ள டவரில் சி.சி.டி.வி.,, கேமரா பிளாஷ் லைட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் வைத்து விட்டால் அப்பகுதியில் உள்ள கூட்டம் எவ்வளவு என்பதை கணக்கிட முடியும் மேலும் குற்றப்பின்னணியில் உள்ளவர்களை எளிதாக கண்டறிந்து அவர்களுடைய எப்.ஆர்.எஸ்., எனப்படும் பகுப்பாய்வு செய்யும் கைரேகை வைத்தும் குற்றப்பின்னணியில் உள்ளவர்களை எளிதாக கண்டறிய முடியும்.

அவ்வாறு குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் என்றால் அங்கேயே எப்.ஐ.ஆர்., போடும் வசதியும் இக்கருவியில் உள்ளது.

மேலும் இந்த சர்விவல் டவரில் மெட்டல் டிடெக்டர், குடிபோதையில் உள்ள ஆசாமிகளைக் கண்டறிய பிரீத் அனலைசர் மற்றும் டிரோன் வசதி உள்ளதால் மக்கள் கூடும் இடங்களில் எத்தனை பேர் உள்ளனர் என்பதை எளிதாக கணக்கிட முடியும்.

காவல்துறை புலனாய்வுக்கு தேவையான வசதிகளை உடைய இந்த சர்விவல் டவர் இம்மாத இறுதியில் சென்னையில் முதல்வர் விஜய் துவங்கி வைக்கப்பட இருந்தது.

இந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கூட்டத்தை கண்காணிக்க முதன் முதலாக பயன்படுத்த தமிழக காவல் துறை திட்டமிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இன்று காலை 10:00 மணியளவில் வேலுார் பஸ்கள் நிறுத்துமிடத்தில் சர்விவல் டவரை விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் அறிமுகப்படுத்தி செயல்பாட்டிற்கு கொண்டு வர உள்ளனர்.

Advertisement