விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பேட்டரி கார்கள் இயக்கப்படுமா?
விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பேட்டரி கார்களை இயக்கிட முதியோர், மாற்றுத்திறனாளி பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை - திருச்சி, கடலுார் - சேலம் மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பு. வந்தே பாரத், தேஜாஸ், ஹம்சப்பார், மும்பை உட்பட வாராந்திர சிறப்பு ரயில்களும், சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ், பாசஞ்சர், சரக்கு என தினசரி 60க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன.
விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அரியலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் கல்வி, மருத்துவம், வணிகம் போன்ற தேவைகளுக்கு பயனடைகின்றனர்.
இதன் மூலம் பயணிகள் வருவாய் மட்டுமல்லாது ஆர்.எம்.எஸ்., (ரயில்வே மெயில் சர்வீஸ்) மற்றும் பார்சல் சேவை வாயிலாகவும் ரயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் கிடைக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 10 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ரயில் நிலைய முகப்பில் இருந்து நடைமேடை 1, 2, 3 மற்றும் 4ல் செல்வதற்கு 100 முதல் 500 மீ., தொலைவிற்கு செல்ல வேண்டும். உயர்மட்ட நடைபாலம் இருந்தாலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் ரயில் பாதையை கடந்து தான் செல்ல முடிகிறது.
இருப்பினும் நடைமேடைக்கு செல்வதற்குள் முதியோர் மிகுந்த சிரமமடைகின்றனர். மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு மூன்றுசக்கர சைக்கிள் இருந்தாலும், ரயில் பாதையை கடந்து செல்ல நேர விரயம் ஏற்படுகிறது.
சென்னை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் தலா 1 பயணியிடம் 30 ரூபாய் வீதம் பேட்டரி காரில் பயணிக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சமீபத்தில், அரியலுார் ரயில் நிலையத்திலும் பேட்டரி கார் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஆனால், அதிக பயணிகள் வந்து செல்லும் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பேட்டரி கார்கள் இயக்கம் கொண்டு வரப்படவில்லை. எனவே, முதியோர், மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி தெற்கு ரயில்வே துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.