டூவீலரில் அலங்கார விளக்குகள் தடுக்க வலியுறுத்தல்

அரூர்: அரூர் உட்கோட்டத்தில், இருசக்கர வாகனங்களில், அதிக ஒளி திறனுள்ள, முகப்பு விளக்குகள் பயன்படுத்துவதால், விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில், பெரும்பாலானோர் தங்களது இருசக்கர வாகனத்தின் முகப்பு மற்றும் சுற்றுப்பகுதியில் பல வண்ணங்களில் அலங்கார எல்.இ.டி., விளக்குகளை பொருத்தி உள்ளனர். இதுபோன்ற எல்.இ.டி., விளக்குகள் அதிக ஒளியை உமிழ்வதால், இரவு நேரத்தில் எதிரே வருபவர்களுக்கு கண் கூசுவதுடன், எதிர் மற்றும் முன்னால் செல்லும் வாகனம், சாலையோரத்தில் உள்ள பள்ளம், மின்கம்பம், மரங்களில் மோதி விபத்து ஏற்படும் நிலையுள்ளது. குறிப்பாக, சாலையோர வளைவுகள், பிரிவு சாலைகள் உள்ளிட்ட இடங்களில், முன்னால் செல்லும் வாகனத்தில் உள்ள அலங்கார விளக்குகளால், பின்னால், செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.இருசக்கர வாகனங்களில், 40 வாட்ஸ் விளக்குகள் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், ஹெட்லைட் விளக்கு மாற்றி அமைத்தாலோ, வாகனத்தின் சுற்றுப்பகுதியில் பல வண்ணங்களில் அலங்கார எல்.இ.டி., கட்டிங் பொருத்தினால் அபராதம் விதிக்க விதி இருந்தும், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்டுகொள்வதில்லை. இதனால், அரூர் உட்கோட்டத்தில் பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள், தங்களது வாகனத்தில் அலங்கார விளக்குகளுடன் உலா வருகின்றனர். எனவே, இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement