பராமரிப்பற்ற கழிப்பறையில் தீப்பற்றி எரிந்த சுவிட்ச் பாக்ஸ்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் நகராட்சி, 3வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர் மயான சாலையில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமுதாய பொதுகழிப்பறை உள்ளது.
இதை அப்பகுதியை சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கழிப்பறையில் வாஷ்பேஷன், பைப்லைன், கதவு, தரைத்தளம் என அனைத்தும் சேதமடைந்துள்ளன. மேலும், கழிப்பறையை முறையாக பராமரிக்காததுடன், அதில், பழைய டயர்கள், பிளாஸ்டிக் குப்பை கொட்டப்பட்டுள்ளன.இதனால், கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால், கழிப்பறையை பயன்படுத்த முடியாமல், அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
நேற்று காலை, 8:00 மணிக்கு கழிப்பறையில் இருந்த மின் சுவிட்ச் பாக்ஸ் தீப்பற்றி எரிந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் தகவலின்படி, அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து, தீயை அணைத்தனர்.