தடுப்பணைகள் துார்வார விவசாயிகள் கோரிக்கை

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டி ஊராட்சி அருகே வனப்பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து
ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பக்தர்கள் குளித்து விட்டு கோவிலுக்கு செல்ல, வனத்துறை மூலமாக பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தடுப்பணைகள் ஆங்காங்கே உள்ளன. இதில் எந்நேரமும் தண்ணீர் தேங்கி இருக்கும். தற்போது தடுப்பணையில், மலையில் இருந்து அடித்து வரும் மண் நிரம்பி உள்ளதால், தண்ணீர் குறைந்தளவே தேங்குகிறது. குளிப்பதற்க்கு பக்தர்கள், பொதுமக்கள் இறங்கும் போது சேற்றில் சிக்கி உயிரிழக்கும் நிலை
ஏற்படுகிறது.
மேலும், வன விலங்குகள் குடிநீருக்காக அலையும் நிலையும் உள்ளது.
இந்த தடுப்பணையில் தேங்கிய மண்ணை அகற்றி, துார்வாரினால், மழைக்காலங்களில் தண்ணீர் அதிகளவில் தேங்கி, நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் சுற்று வட்டார கிணறுகளில் தண்ணீர் ஊறும். விவசாயம் செழிக்கும், வன விலங்குகளுக்கு தேவையான குடிநீரும் கிடைக்கும். பக்தர்கள் குளிக்க போதுமான அளவு தண்ணீர் வசதியும் ஏற்படும்.
இது குறித்து வனத்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, வனத்துறையினர் தடுப்பணைகளை துார்வார நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement