மஞ்சள் குலை வாங்குவது ஏன்?

மங்கலப்பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழும் மஞ்சள் மகிமை மிக்கது. மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். அதனால் தான் சுமங்கலிப்பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக்கொள்கிறார்கள். புத்தாடை அணியும்போது< அதில் மஞ்சள் தடவி அணிகிறோம். எந்த சுபநிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில் மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம். திருமண வைபவங்களில் மஞ்சள் இடித்தல் என்று கூட ஒரு சடங்கு இருந்தது. முனைமுறியாத அரிசியான அட்சதை தயாரிக்கும் போது மஞ்சள் சேர்த்துத் தான் தயாரிப்பர். எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வணங்குவதும் நம் வழக்கம். சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும்போது அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வழியனுப்புவதும் மங்கலத்தின் அடையாளம் தான். இப்படி மகிமை மிக்க மஞ்சள்கிழங்குச் செடியினை பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர். அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி மறுநாள் காலையில்" மஞ்சள் கீறுதல் என்னும் சடங்காகச்செய்வர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கினைக் கீறி சிறியவர்களின் நெற்றியில் இட்டு ஆசியளிப்பர். வீட்டில் உள்ள அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று வாழவேண்டும் என்பதே இச்சடங்கின் நோக்கம்.