

ஒரு காலத்தில் வீட்டில் வெள்ளையடிக்கும் பழக்கம் மட்டுமே இருந்தது. இப்போது போல விதவிதமான வண்ணங்களை பூசும் வழக்கமில்லை. எனவே வீட்டு வாசல் சுவரில் வெள்ளையடித்து, நடுவில் காவிநிற பட்டையை அடிப்பார்கள். காவி இறைவனை சென்றடைவதற்குரிய நிறம். துறவிகளுக்குரிய அடையாளம். இல்லறத்தில் இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில், மனதளவிலாவது துறவறத்தை கடைபிடிக்க வேண்டும், பற்றற்ற நிலைக்கு செல்ல வேண்டும் என்பதையே இது குறிக்கிறது. பொங்கல் கட்டி எனப்படும் பொங்கல் பானை வைக்கும் கற்களிலும் (அடுப்பு) வெள்ளையடித்து இடையிடையே காவிபட்டை (நீளமான கோடு) இட வேண்டும். கோயில் மதில் சுவர்களில் வெள்ளை, காவி நிற கோடுகள் போடுவதன் ரகசியம் இதுவே. மேலும் இந்தக் கோடுகள் கள்ளமற்ற பால் மனமும், செம்மையான (உறுதியான) மனமும் வேண்டும் என்பதையும் இங்கு வரும் பக்தன் பெற்றுச் செல்ல வேண்டும் என்பதையும் குறிக்கிறது.