10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடை குறைப்பு * விடா முயற்சியால் வெண்கலம் வென்ற அமன்

1

பாரிஸ்: பத்து மணி நேரத்தில் 4.6 ஒலிம்பிக் எடை குறைத்த அமன் ஷெராவத், வெண்கலப் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியா சார்பில் 5 வீராங்கனைகள், ஒரு வீரர் என மொத்தம் 6 பேர் களமிறங்கினர்.
நிஷா, அன்டிம், அன்ஷு என யாரும் பதக்கம் வெல்லவில்லை. பைனலுக்கு முன்னேறி நம்பிக்கை தந்த, வினேஷ் போகத் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஆண்களுக்கான 57 கிலோ பிரிவு 'பிரீஸ்டைல்' போட்டியில், இந்தியா சார்பில் அமன் ஷெராவத் களமிறங்கினார். 23 வயதுகுட்பட்ட பிரிவில் உலக சாம்பியன் ஆன இவர், அரையிறுதியில் தோற்றார். இருப்பினும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் போர்டோரிகோ வீரர் டேரியன் டாய் குரூசை எதிர்கொண்டார்.
இதில் 13-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே மல்யுத்த நட்சத்திரம் ஆனார். தவிர, ஒலிம்பிக் அரங்கில் பதக்கம் வென்ற இளம் இந்தியர் என வரலாறு படைத்தார் அமன் (21 வயது, 24 நாள்).
வினேஷ் பாடம்
இம்முறை மல்யுத்தம் 50 கிலோ பிரிவில் களமிறங்கிய வினேஷ் போகத் பைனலுக்கு முன்னேறினார். இதற்கு முன் நடந்த எடை சோதனையில் 100 கிராம் கூடுதலாக இருக்க, தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதிலிருந்து பாடம் படித்த அமன் ஷெராவாத் தனது எடையை குறைத்துள்ளார். 57 கிலோ பிரிவில் களமிறங்கிய இவர், அரையிறுதியில் தோற்றதற்கு பின் 61.5 கிலோ எடை இருந்திருக்கிறார். அடுத்த 10 மணி நேரத்தில் 4.5 கிலோ குறைத்தாக வேண்டும். இரு பயிற்சியாளர்கள் ஆலோசனைப்படி கடுமையாக பயிற்சி செய்து எடையை குறைத்துள்ளார்.
ஒன்றரை மணி நேரம் 'மேட்' பயிற்சி, ஒரு மணி நேரம் சுடுநீர் குளியல், பின் நள்ளிரவு 12:30 மணிக்கு ஜிம் பயிற்சியில் தொடர்ந்து ஒரு மணி நேரம் 'டிரட்மில்லில்' ஓடினார் அமன். இதனால் ஏற்பட்ட வியர்வையில் எடை குறைந்தது.
அடுத்து 30 நிமிட ஓய்வுக்குப் பின், தலா 5 நிமிடம் கொண்ட 'சாவ்னா' குளியல் 5 முறை (கற்களை சூடாக்கி, நீர் ஊற்றி, அதில் இருந்து வெளியாகும் நீராவியில் குளிப்பது) எடுத்தார். இதனால் தசைகளுக்கு 'ரிலாக்ஸ்' கிடைத்து.
பின் 'ஜாக்கிங்', ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டார். அதிகாலை 4:30 மணிக்கு அமன் எடை 56.9 கிலோ ஆக குறைய, நிம்மதி பிறந்தது. பயிற்சிக்கு இடையில் சுடுநீரில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து தரப்பட்டன. 10 மணி நேரத்தில் 4.6 எடை குறைத்த இவர், வெண்கலம் வென்று அசத்தினார்.

துாங்கவில்லை
பயிற்சியாளர் ஜக்மேந்தர், வீரேந்தர் தாஹியா என இருவரும், தொடர்ந்து அமன் ஷெராவத் எடையை கண்காணித்தனர். வீரேந்தர் கூறுகையில்,'' எடையை குறைப்பது வழக்கமான ஒன்று தான். எனினும் வினேஷ் போகத் சம்பவத்துக்குப் பின் அதிக 'டென்ஷன்' ஆகிவிட்டது. மீண்டும் ஒருமுறை பதக்கத்தை இழக்க விரும்பவில்லை. இதனால் அமன் எடையை குறைக்க ஸ்பெஷல் முயற்சிகள் எடுத்தோம். ஒரு மணிக்கு நேரத்துக்கு ஒருமுறை சோதித்தோம். இரவு முழுவதும் துாங்கவே இல்லை,'' என்றார்.

ஜூனியர்-சீனியர்
ஒலிம்பிக் பதக்கம் வென்ற 'ஜூனியர்' (இளம்) இந்திய வீரர் ஆனார் அமன் (மல்யுத்தம், 21 வயது, 24 நாள்). இளம் வயதில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையாக சிந்து (21 வது, 1 மாதம், 14 நாள், பாட்மின்டன், 2016) உள்ளார்.
* ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றிய இந்தியாவின் 'சீனியர்' வீரராக ராஜ்யவர்தன் ரத்தோர் (34 வயது, 6 மாதம், 19 நாள், துப்பாக்கிசுடுதல், 2004), 'சீனியர்' வீராங்கனையாக மேரி கோம் (29 வயது, 8 மாதம், 15 நாள், குத்துச்சண்டை, 2012) உள்ளனர்.

சிறு வயது சோகம்
அமன் ஷெராவத் 11 வயதில் பெற்றோரை இழந்தார். தாத்தாவிடம் வளர்ந்தார். 2013ல் மல்யுத்த பயிற்சிக்காக வடக்கு டில்லியில் உள்ள சத்ராசல் மையத்தில் இணைந்தார். பின் சர்வதேச போட்டிகளில் ஜொலிக்க துவங்கினார்.

பெற்றோருக்கு சமர்ப்பணம்
ஒலிம்பிக் என்றால் என்னவென்று எனது பெற்றோருக்குத் தெரியாது. இருப்பினும், நான் மல்யுத்த வீரராக வேண்டும் என அவர்கள் விரும்பினர். இந்த பதக்கத்தை எனது பெற்றோருக்கும், தேசத்திற்கும் சமர்ப்பிக்கிறேன்.

Advertisement