அடங்காத 'அசுரன்' டாம் குரூஸ்: நிறைவு விழாவில் அசத்தல்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில், நடிகர் டாம் குரூசின் சாகசம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ல் துவங்கியது. 206 நாடுகளை சேர்ந்த 10,714 பேர் பங்கேற்றனர். இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் 3 வெண்கலம், மல்யுத்தம், ஹாக்கியில் தலா ஒரு வெண்கலம், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவின் வெள்ளி என 6 பதக்கங்கள் கிடைத்தன. 17 நாள் நடந்த பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா நேற்று நிறைவு பெற்றது.

பாரிசின் ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நடந்த நிறைவு விழாவை 80,000 ரசிகர்கள் கண்டு களித்தனர். விளையாட்டு நட்சத்திரங்களின் அணிவகுப்பு நடந்தது. இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர், ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் சேர்ந்து மூவர்ணக்கொடியுடன் ஏந்தி வந்தனர். உலகின் சிறந்த இசை கலைஞர்களின் ஆடல், பாடல், சர்க்கஸ் கலைஞர்களின் வித்தை, பாலே நடனம் இடம் பெற்றன.
160 அடி உயரத்தில்...
'மிஷன் இம்பாசிபிள்' புகழ் ஹாலிவுட் ஆக் ஷன் 'ஹீரோ' டாம் குரூஸ் மிரட்டினார். 62 வயதான இவர், துடிப்பான இளைஞர் போல சாகசம் நிகழ்த்தினார். ஸ்டேட் டி பிரான்ஸ் மைதான மேற்கூரையில் தோன்றினார். 160 அடி உயரத்தில் இருந்து, உடலில் கயிறு கட்டியவாறு, நிறைவு விழா மேடைக்கு துல்லியமாக குதித்தார். இவரை பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பின் அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோனா பைல்சிடம் இருந்து ஒலிம்பிக் கொடியை பெற்றார். சிறிது நேரம் கொடியை அசைத்த இவர், மேடையின் கீழே இருந்த பிரத்யேக பாதை வழியாக வெளியேறினார்.


ஹாலிட்டில் ஒலிம்பிக் தொடர்ந்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட 'வீடியோ' காட்சிகள் ஒளிபரப்பாகின. அதில் டாம் குரூஸ், ஒலிம்பிக் கொடியை பைக்கில் கட்டிக் கொண்டு பறக்கிறார். ஈபிள் டவர் உள்ளிட்ட பாரிசின் முக்கிய பகுதிகளை வலம் வருகிறார். பின் பைக் உடன் அப்படியே விமானத்தில் ஏறுகிறார். அடுத்த ஒலிம்பிக் நடக்க உள்ள அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் (2028) நகரை எட்டியதும் விமானத்தில் இருந்து குதிக்கிறார். வானில் சிறிது நேரம் 'ஸ்கை டைவிங்' செய்கிறார். 'பாராசூட்' மூலம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முக்கிய அடையாளமாக திகழும் ஹாலிவுட் திரைப்பட நகரின் பகுதியில் இறங்குகிறார். ஒலிம்பிக் கொடியை வீரர் ஒருவரிடம் ஒப்படைக்கிறார். இதையடுத்து ஹாலிவுட் பெயர் அருகே ஐந்து ஒலிம்பிக் வளையம் தோன்றுகிறது. இது, அடுத்த ஒலிம்பிக் லாஸ் ஏஞ்சல்சில் நடக்க இருப்பதை உணர்த்தியது.


விழா நிறைவுமைதானத்தில் தொடர்ந்து நடந்த விழாவில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நிறைவு பெறுவதாக, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் அறிவித்தார். இதன் அடையாளமாக பிரான்ஸ் நீச்சல் வீரர் லியான் மர்சந்த் கையில் இருந்த சிறிய விளக்கின் தீபம் ஊதி அணைக்கப்பட்டது. 'லேசர் ஷோ', வாணவேடிக்கையுடன் விழா முடிந்தது.



முத்தம் கொடுத்த ரசிகை


நிறைவு விழாவில் ரசிகர்களிடம் டாம் குரூஸ் கைகுலுக்கினார். அப்போது ஒரு ரசிகை அவரை இழுத்து, இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டவாறு 'செல்பி' எடுத்தார். இதனால் டாம் குரூஸ் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

Advertisement