பதக்கம் தராத பாட்மின்டன்: ரூ. 72 கோடிக்கு பலனில்லை

9

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் சிந்து உள்ளிட்ட இந்திய பாட்மின்டன் நட்சத்திரங்கள் ஏமாற்றினர்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 117 பேர் பங்கேற்றனர். இவர்களது பயிற்சிக்காக இந்திய விளையாட்டு ஆணையம் ரூ.470 கோடி செலவிட்டது. இருப்பினும் 6 பதக்கம் மட்டுமே கிடைத்தது. இது கடந்த டோக்கியோ ஒலிம்பிக்(2021, 7 பதக்கம்) உடன் ஒப்பிடுகையில் குறைவு.

பாட்மின்டனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 12 ஆண்டுகளுக்கு பின், இந்தியாவுக்கு பாட்மின்டனில் பதக்கம் கிடைக்கவில்லை. கடந்த 3 ஒலிம்பிக்கில் செய்னா (2012ல் வெண்கலம்), சிந்து (2016ல் வெள்ளி, 2020ல் வெண்கலம்) அசத்தினர்.

பாட்மின்டன் பயிற்சிக்காக ரூ. 72.03 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிந்து 'ஹாட்ரிக்' பதக்கம் வெல்வார் என ரசிகர்கள் காத்திருந்தனர். இவரது பயிற்சி செலவுக்காக ரூ. 3.13 கோடி தரப்பட்டது. ஜெர்மனியில் பயிற்சி மேற்கொள்ள சிந்துவுக்கு ரூ. 26.60 லட்சம் கொடுக்கப்பட்டது. ஆனால், 'ரவுண்ட்-16' சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். தற்போது 29 வயதாகும் சிந்து, அடுத்த ஒலிம்பிக்கின் போது உடற்தகுதியுடன் இருப்பது சந்தேகம். ஒருவேளை பங்கேற்றால், பதக்கம் வெல்ல கடுமையாக போராட வேண்டும்.

ஆசிய அளவில் இரட்டையர் பிரிவில் அசத்திய சாத்வித், சிராக் மீது எதிர்பார்ப்பு இருந்தது. இவர்களது பயிற்சி செலவுக்காக ரூ 5.62 கோடி தரப்பட்டது. காலிறுதியில் தோற்று அதிர்ச்சி கொடுத்தனர்.

பிரனாய்க்கு ரூ. 1.8 கோடி, அஷ்வினி-தனிஷாவுக்கு தலா ரூ. 1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவர்கள் யாரும் பதக்கத்தை நெருங்கவில்லை.

பிரான்சில் பயிற்சி மேற்கொள்ள லக்சயா செனுக்கு ரூ. 9.33 லட்சம் வழங்கப்பட்டது. அரையிறுதி வரை சென்ற இவர், 4வது இடம் பிடித்து ஆறுதல் தந்தார்.
சாத்விக்-சிராக், லக்சயா பாடம் படித்து சாதிக்கலாம். பிரியன்ஷு ரஜாவத், திரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் போன்ற இளம் திறமைகளுக்கு ஊக்கம் அளித்தால் லாஸ் ஏஞ்சல்சில் பதக்கம் வெல்லலாம்.

Advertisement