ஆறு மனமே ஆறு...இந்தியாவுக்கு 'ஆறு' * ஒலிம்பிக் செயல்பாடு எப்படி

2

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம் கூட வெல்லாமல் திரும்புகிறது. 6 பதக்கம் மட்டும் வென்றது. பதக்க பட்டியலில் 71 வது இடம் பெற்றது.
பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் 65 வீரர், 45 வீராங்கனை என மொத்தம் 110 பேர் களமிறங்கினர். டோக்கியோவில் 7 பதக்கம் வென்றதால், இம்முறை இரட்டை இலக்க பதக்கம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கம் மட்டும் வென்றது.
'துல்லியமான' துப்பாக்கிசுடுதல்
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியா சார்பில் 21 பேர் களமிறங்கினர். இம்முறை இந்தியாவுக்கு மூன்று பதக்கம் கிடைத்தது. மனு பாகர் (தனிநபர், கலப்பு இரட்டையர்), சரப்ஜோத், ஸ்வப்னில் வெண்கலம் வென்று அசத்தினர். ஒலிம்பிக்கில் எந்த ஒரு விளையாட்டிலும் ஒரே முறையில் இந்தியா, இதுபோல 3 பதக்கம் வென்றது கிடையாது.
சிந்து ஏமாற்றம்
பாட்மின்டனில் 2 பதக்கம் வெல்லும் என நம்பப்பட்டது. இரட்டையரில், சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதியில் தோற்றது. ஒற்றையரில் சிந்து, பிரனாய் காலிறுதியில் வீழ்ந்தனர். ஒலிம்பிக் பாட்மின்டன் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என பெருமை பெற்ற லக்சயா சென், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தோற்று அதிர்ச்சி கொடுத்தார்.
தவறிய 'இலக்கு'
வில்வித்தையில் வழங்கப்பட்ட ஐந்து பதக்கத்துக்கான போட்டியிலும், இந்தியா களமிறங்கியது. நான்காவது ஒலிம்பிக்கில் களமிறங்கிய 'சீனியர்' தீபிகா குமாரி காலிறுதியில் வீழ்ந்தார். கலப்பு இரட்டையரில் மட்டும் திராஜ், அன்கிதா ஜோடி, முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஜோடி என வரலாறு படைத்தது.
வீணான குத்துச்சண்டை
குத்துச்சண்டையில் அமித் பங்கல், நிகாத் ஜரீன் துவக்கத்திலேயே கைவிட, லவ்லினா, நிஷாந்த் தேவ் காலிறுதியில் வீழ்ந்தனர். டென்னிசில் போபண்ணா-ஸ்ரீராம் பாலாஜி ஜோடி, சுமித் நாகல் முதல் சுற்றுடன் திரும்பினர். தடகளத்தில் அவினாஷ் சபிள் (3000 மீ., ஸ்டீபிள் சேஸ்) மட்டும் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்தியர் ஆனார். இவர் 11 வது இடம் பிடித்தது தான் அதிகம்.
அடுத்து ஒலிம்பிக் வரும் 2028ல் லாஸ் ஏஞ்சல்சில் நடக்க உள்ளது. இதில் இந்திய நட்சத்திரங்கள் அதிக பதக்கம் வெல்வர் என நம்புவோம்.

சில சாதனைகள்
* ஈட்டி எறிதலில் எதிர்பார்க்கப்பட்ட 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா, இம்முறை வெள்ளி வென்றார். இதையடுத்து சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் தடகளத்தில் அடுத்தடுத்த போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார்.
* துப்பாக்கிசுடுதலில் முதல் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ஆனார் மனு பாகர். தவிர, சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்தியர், முதல் வீராங்கனை ஆனார்.
* மல்யுத்தத்தில் வெண்கலம் கைப்பற்றிய அமன் ஷெராவத் (21 வயது, 24 நாள்), ஒலிம்பிக் பதக்கம் வென்ற இளம் இந்தியர் என பெருமை பெற்றார்.

ஹாக்கி 'ஸ்பெஷல்'

ஒலிம்பிக் ஹாக்கியில் 8 தங்கம், 1 வெள்ளி வென்றது இந்தியா. 1968, 1972 என அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றது. தற்போது 2021, 2024 என அசத்திய இந்திய அணி, 52 ஆண்டுக்குப் பின் தொடர்ந்து இரண்டு வெண்கல பதக்கம் கைப்பற்றி அசத்தியது.

6 பதக்கங்கள்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற 6 பதக்கங்கள்:
வீரர்/வீராங்கனை போட்டி பதக்கம்
நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் வெள்ளி
மனுபாகர் துப்பாக்கிசுடுதல் வெண்கலம்
மனுபாகர், சரப்ஜோத் சிங் துப்பாக்கிசுடுதல் வெண்கலம்
ஸ்வப்னில் துப்பாக்கிசுடுதல் வெண்கலம்
அமன் ஷெராவத் மல்யுத்தம் வெண்கலம்
ஆண்கள் ஹாக்கி இந்தியா வெண்கலம்

ஒரே வீராங்கனை

ஒலிம்பிக் அரங்கில் 2012ல் மேரி கோம் (குத்துச்சண்டை), செய்னா நேவல் (பாட்மின்டன்), 2016ல் சிந்து (பாட்மின்டன்), சாக் ஷி மாலிக் (மல்யுத்தம்), 2021ல் மீராபாய் சானு (பளுதுாக்குதல்), சிந்து, லவ்லினா (குத்துச்சண்டை), என கடந்த மூன்று முறை குறைந்தது இரண்டு வீராங்கனைகள் இந்தியாவுக்கு பதக்கம் வென்றனர். இம்முறை மனுபாகர் மட்டும் தான் பதக்கம் கைப்பற்றினார்.

'நான்காவது' சோகம்
பாரிஸ் ஒலிம்பிக்கில், 6 போட்டியில் இந்தியா நான்காவது இடம் பிடித்து பதக்கத்தை இழந்தது சோகம்.
* பளுதுாக்குதலில் மீராபாய் சானு, 1 கிலோ குறைவாக துாக்கியதால் வெண்கலம் நழுவியது.
* துப்பாக்கிசுடுதலில் மனுபாகர் (25 மீ., பிஸ்டல்), அர்ஜுன் (10 மீ., ஏர் ரைபிள்) 4வது இடம் பிடித்தனர்.
* வில்வித்தையில் திராஜ், அன்கிதா ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வீழ்ந்தது.
* லக்சயா சென் (பாட்மின்டன்) வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தோற்றார்.
* மகேஷ்வரி, அனன்ஜீத் சிங் ஜோடி (துப்பாக்கிசுடுதல்), 1 புள்ளி வித்தியாசத்தில் வெண்கலத்தை இழந்தது.

யாருக்கு பொறுப்பு
ஒலிம்பிக்கில் சிறிய நாடுகள் கூட பல தங்கம் வென்றன. இந்தியாவுக்கு மட்டும் கிடைக்கவில்லை. பாட்மின்டனில் லக்சயா சென், வெண்கல பதக்கத்தை இழந்தால் அதிருப்தி அடைந்த முன்னாள் வீரர், இந்திய பாட்மின்டன் பயிற்சியாளர் பிரகாஷ் படுகோன் கூறுகையில்,'' லக்சயா நான்காவது இடம் பெற்றது ஏமாற்றம் தருகிறது. வீரர்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும்,'' என்றார்.
இதற்கு பதிலளித்த இந்திய பாட்மின்டன் வீராங்கனை அஷ்வினி பொன்னப்பா,' சரியான முறையில் வீரர், வீராங்கனைகளை தயார் செய்ய வேண்டியது பயிற்சியாளர்கள் பொறுப்பு,' என்றார்.

சர்ச்சைகள்
பாரிஸ் ஒலிம்பிக் துவக்கத்தில் இருந்தே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.
துவக்க விழாவில் ஒலிம்பிக் கொடியை மாற்றி ஏற்றியது, நாடுகளின் பெயர்களை மாற்றி கூறியது என சிக்கலுடன் ஆரம்பம் ஆனது.
* ஒலிம்பிக் கிராமத்தில் உணவின் தரம் சரியில்லை, போதிய 'ஏசி' வசதி இல்லை என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட பல அணிகள், ஒட்டலில் தங்கின.
* இரண்டு பதக்கம் வென்ற இத்தாலி நீச்சல் வீரர் தாமஸ் செக்கான், பாரிஸ் பார்க்கில் படுத்து உறங்கினார்.
* ஆஸ்திரேலிய முன்னணி ஹாக்கி வீரர் போதைப்பொருள் வாங்க முயற்சித்து கைதானார்.
* இந்திய மல்யுத்த வீராங்கனை அன்டிம், தனது அடையாள அட்டையை தவறாக பயன்படுத்தியதால், உடனடியாக நாடு திருப்பி அனுப்பப்பட்டார்.
* பெண்கள் குத்துச்சண்டையில் அல்ஜிரியாவின் இமேன் கெலிப், இத்தாலியின் ஏஞ்சலா கரினி மோதினர். போட்டி துவங்கிய 46 வினாடியில் ஏஞ்சலா விலகினார். இமேன் கெலிப்புக்கு ஆண் தன்மைக்குரிய 'டெஸ்டோஸ்டிரான்' அளவு அதிகமாக இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. இவரை பெண்கள் குத்துச்சண்டையில் விளையாட அனுமதித்து இருக்கக் கூடாது என்றனர். இருப்பினும், இமேன் கெலிப் அடுத்தடுத்த போட்டியில் வென்று தங்கம் கைப்பற்றினார்.
* இதேபோல தைவான் வீராங்கனை லின் யு-டிங் மீதும் பாலின சர்ச்சை கிளம்பியது. இதைக் கடந்து கடைசியில் தங்கம் வென்று சாதித்தார்.

புதுமைகள்
பாரிஸ் ஒலிம்பிக் பல்வேறு புதுமை இருந்தன.
* துவக்கவிழா, முதன் முறையாக மைதானத்துக்கு வெளியே நடந்தது.
* ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக எரிபொருள் எதுவும் பயன்படுத்தப்படாமல், நுாறு சதவீதம் எலக்ட்ரிக் ஒலிம்பிக் ஜோதி உருவாக்கப்பட்டுள்ளது.
* தவிர பாரிசில் இருந்து 15,700 கி.மீ., துாரத்தில், பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள, தஹிதியில் நீர்ச்சறுக்கு போட்டி நடந்தன. ஒலிம்பிக் போட்டி இப்படி நீண்ட துாரத்தில் நடந்தது இது தான் முதன் முறை.
* இந்த நட்சத்திரங்களுக்கு ஒலிம்பிக் கிராமத்தில் தங்கிய அனுபவத்தை கொடுக்க, புதிய முயற்சியாக, 'அரானுய்-5' என்ற ஐந்து அடுக்கு கப்பல் ஒன்று பயன்படுத்தப்பட்டது.

வினேஷ் 'ஷாக்'

மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் பைனலுக்கு முன்னேறினார். ஆனால் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட தங்கம் அல்லது வெள்ளி கிடைக்காமல் போனது. இதுகுறித்து, சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்துள்ளார். விரைவில் தீர்ப்பு வரவுள்ளது.

Advertisement