பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா: காத்திருக்கும் சுவாரஸ்யம்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டி இன்று வண்ணயமான விழாவுடன் நிறைவு பெறுகிறது. ஹாலிவுட் நடிகர் டாம் குரூசின் சாகச சண்டை காட்சிகள், ஸ்னுாப் டாக், பில்லி எலிஷ் உள்ளிட்ட உலகின் முன்னணி பாடகர்களின் இசை நிகழ்ச்சிகள் களை கட்ட உள்ளன.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ல் துவங்கியது. 206 நாடுகளை சேர்ந்த 10, 714 பேர் பங்கேற்கின்றனர். இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் 3 வெண்கலம், மல்யுத்தம், ஹாக்கியில் தலா ஒரு வெண்கலம், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவின் வெள்ளி என 6 பதக்கங்கள் கிடைத்தன.
இன்றைய கடைசி நாளில் பெண்கள் மாரத்தான், ஆண்கள் ஹேண்ட்பால் பைனல், பெண்களுக்கான நவீன பென்டாத்லான் உள்ளிட்ட சில போட்டிகள் நடக்க உள்ளன. 17 நாள் உலகை கட்டிப் போட்ட பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா, இன்று நிறைவுபெறுகிறது.


இசை வெள்ளம்: கடந்த ஜூலை 26ல் பாரிசின் சென் நதியில் படகு அணிவகுப்புடன் வித்தியாசமாக துவக்க விழா நடந்தது. இதே போல நிறைவு விழாவையும் புதுமையாக நடத்த திட்டமிட்டுள்ளனர். பாரிசின் ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் விழா நடக்க உள்ளது. இதில் 80,000 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்கலாம். 'மிஷன்: இம்பாசிபிள்' புகழ் ஹாலிவுட் பட ஆக் ஷன் 'ஹீரோ' டாம் குரூஸ் மிரட்ட உள்ளார். இவரது மோட்டார்சைக்கிள், ஸ்கைடைவிங் 'ஸ்டன்ட்' காட்சிகள் ரசிகர்களை பரவசமடைய செய்யும். அமெரிக்காவின் ராப் பாடகர் ஸ்னுாப் டாக், பாடகி பில்லி எய்லிஷ், பேண்ட் வாத்திய குழுவான ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ் உட்பட உலகின் முன்னணி இசை கலைஞர்கள் அசத்த உள்ளனர்.


மனு, ஸ்ரீஜேஷ் கவுரவம்: அனைத்து நாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடக்கும். இந்தியா சார்பில் 2 பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுல் வீராங்கனை மனுபாகர், ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் சேர்ந்து மூவர்ணக்கொடியை ஏந்தி வர உள்ளனர். அடுத்த ஒலிம்பிக் போட்டி லாஸ் ஏஞ்ல்சில் 2028ல் நடக்க உள்ளது. பாராம்பரிய முறைப்படி பாரிஸ் மேயர் ஆன் ஹிடால்கோ, ஒலிம்பிக் கொடியை சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் தாமஸ் பாக்கிடம் அளிப்பார். இதை, லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாசிடம் வழங்குவார். நிறைவு விழாவில் ஒலிம்பிக் கொடியை பெறும் முதல் கறுப்பின பெண் மேயர் என்ற பெருமையை கரேன் பாஸ் பெற உள்ளார். 'கிராமி' விருது வென்ற பாடகி கேப்ரியலா சர்மியன்டோ வில்சன்( செல்லமாக எச்.இ.ஆர்.,) அமெரிக்க தேசிய கீதத்தை பாட உள்ளார்.

2028 ஒலிம்பிக் போட்டிக்கான முன்னோட்ட நிகழ்ச்சிக்கு பின், பாரிஸ் ஒலிம்பிக் ஜோதி அணைக்கப்பட்டு, விழா முடிவடையும்.


வானில் 5 வளையம்: நிறைவு விழா இயக்குநர் தாமஸ் ஜாலி கூறுகையில்,''நிகழ்ச்சிக்கு 'சாதனைகள்' என பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இருந்து பாரிஸ் வந்த விளையாட்டு நட்சத்திரங்களுக்கு 'குட்-பை' செல்லும் தருணமாக அமையும். சர்க்கஸ் கலைஞர்களின் வித்தை, ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசம், ஒலிம்பிக் 5 வளையம் போல வானில் தோன்றும் பாலே நடன கலைஞர்கள், உலகின் சிறந்த இசை கலைஞர்களின் நிகழ்ச்சி அனைவரையம் கவரும். டாம் குரூசின் சாகசம், ஹாலிவுட் 'திரில்' படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கும்,'' என்றார்.




கிடைத்தது 'ஆறு'


பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் நேற்று முடிந்தன. ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கம் கிடைத்தன. கடந்த டோக்கியோ (2021) ஒலிம்பிக் உடன் ஒப்பிடுகையில் ஒரு பதக்கம் குறைவு. டோக்கியோவில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கம் கிடைத்தது. இது தான் ஒரு ஒலிம்பிக்கில் இந்தியாவின் அதிகபட்ச பதக்கம். * ஒரு ஒலிம்பிக்கில் 2வது முறையாக 6 பதக்கம் கிடைத்துள்ளது. இதற்கு முன் லண்டன் ஒலிம்பிக்கில் (2012), 2 வெள்ளி, 4 வெண்கலம் கிடைத்திருந்தது. * ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு இதுவரை 10 தங்கம், 10 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கம் கிடைத்துள்ளன. ஹாக்கியில் 8, ஈட்டி எறிதல், துப்பாக்கி சுடுதலில் தலா ஒரு தங்கம் கிடைத்தன.

Advertisement