இரண்டு பதக்கம் வென்ற ரகசியம்: மனம் திறக்கிறார் மனு பாகர்

புதுடில்லி: ''ஒரு கையில் துப்பாக்கி, இன்னொரு கையில் புத்தகம் என இரண்டிலும் படு சுட்டியாக உள்ளேன். விளையாட்டு நட்சத்திரங்கள் படிப்பிலும் கெட்டியாக இருக்க வேண்டும்,'' என மனு பாகர் தெரிவித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் அசத்தினார் இந்தியாவின் இளம் வீராங்கனை மனு பாகர் 22. இரண்டு வெண்கலம் (10 மீ., 'ஏர் பிஸ்டல்' தனிநபர், கலப்பு அணி) வென்று சாதனை படைத்தார். இவரது வெற்றியில், பயிற்சியாளர் ஜஸ்பால் ராணாவுக்கு பங்கு உண்டு. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021), துப்பாக்கி பழுதானதால் வாய்ப்பை இழந்த மனுவுக்கு, இம்முறை நம்பிக்கை அளித்தார். இருவரும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.


நம்பிக்கை பிறந்தது: முகமெல்லாம் புன்னகையுடன் அழகு தேவதையாக தோன்றிய மனு பாகர் கூறுகையில்,''எனக்கு தந்தை போன்றவர் ஜஸ்பால் ராணா. என்னுள் துணிச்சலை வளர்த்தார். 'முடியும்' என்ற நம்பிக்கையை விதைத்தார். தேவைப்பட்டால் கன்னத்தில் அறைந்து கூட, 'உன்னால் முடியும். உனக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது' என்று சொல்லக்கூடியவர். இதற்கு ராணா, மறுப்பு தெரிவித்தார். உடனே மனு, அறைவார் என்று சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். நிஜமாக அல்ல. அந்த அளவுக்கு அக்கறை செலுத்தி என் திறமையை வெளிப்படுத்துவார்.

டோக்கியோ சம்பவத்திற்கு யார் மீதும் பழி சுமத்த விரும்பவில்லை. இதிலிருந்து பாடம் கற்றேன். போட்டி உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என உணர்ந்து கொண்டேன். சோகமாக இருந்த எனக்கு, பயிற்சியாளர் ராணா ஊக்கம் அளித்தார். 'நீ விரும்பியது அல்ல; உனக்கு தகுதியானது தான் கிடைக்கும்' என்றார். பாரிசில் எங்களது பயணம் வெற்றிகரமாக அமைந்தது.

கல்வி அவசியம்: பிளஸ் 2 வில் 90 சதவீத மதிப்பெண் பெற்றேன். அதே நேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றேன். பட்டம் பெற வேண்டுமென பயிற்சியாளர் ராணா வலியுறுத்தினார். டில்லியில் உள்ள ஸ்ரீ ராம் கல்லுாரியில் சேர்ந்தேன். ஒரு கையில் துப்பாக்கி, இன்னொரு கையில் புத்தகம் என பயணிக்கிறேன். விளையாட்டு நட்சத்திரங்களுக்கு கல்வி அவசியம்,''என்றார்.
ராணா கூறுகையில்,''டோக்கியோ ஒலிம்பிக் உள்ளிட்ட பழைய விஷயத்தை விவாதிக்க கூடாது என ஒரே ஒரு நிபந்தனையை மனு பாகருக்கு விதித்தேன். இதற்கு பின் முன்னோக்கி சென்றோம். அவருக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கி தருவதே முக்கிய பணியாக இருந்தது. விளையாட்டில் அதிக காலம் நீடிக்க முடியாது. கடைசி வரை படிப்பு கைகொடுக்கும். என்னிடம் பயிற்சி பெற விரும்புபவர்கள் கண்டிப்பாக கல்வியை தொடர வேண்டும்,'' என்றார்.

கணக்கு வருமா
ஹரியானாவை சேர்ந்த மனுபாகர், அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். அடுத்து, நாளந்தா பல்கலையில் மேற்படிப்பு படிக்க திட்டமிட்டுள்ளார். அங்கு என்ன படிக்க விருப்பம் என கேட்டதற்கு,''எந்த பாடமும் படிக்க தயார். கணக்கு மட்டும் வேண்டாம்,''என்றார்.
இதற்கு ஜஸ்பால் ராணா,''போட்டியில் எடுக்கும் புள்ளியை கூட நினைவில் கொள்ள மாட்டார். அந்த அளவு கணக்கில் வீக்,''என ஜாலியாக குறிப்பிட்டார்.


'சிஸ்டம்' சரியில்லை

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்காக 3 தங்கம் (2006) வென்றவரும் சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது வென்றவருமான ஜஸ்பால் ராணா, 48, பல தடைகளை தகர்த்து, மனு பாகர் பதக்கம் வெல்ல உதவினார்.

டில்லியில் உள்ள கர்னி சிங் துப்பாக்கி சுடுதல் மையத்தில் நடந்த ஒலிம்பிக்கிற்கான தகுதி போட்டியின் போது, ராணாவை வெளியேற சொன்னார்கள். மனு பாகரின் தனிப்பட்ட பயிற்சியாளராக பணியாற்ற அனுமதிக்கவில்லை. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா தலையிட, பாரிஸ் சென்றார். அங்கு ஒலிம்பிக் கிராமத்திற்குள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. பாரிசில் உள்ள ஓட்டலில் தங்கினார். ரசிகர்களுக்கான கேலரியில் இருந்து மனுவுக்கு பயிற்சி அளித்தார்.


இது குறித்து ராணா கூறுகையில்,''தேசிய ரைபிள் சங்கத்தினர் விதித்த கட்டுப்பாடுகள் எங்களை ஒரு சதவீதம் கூட பாதிக்கவில்லை. நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. ஆனால், நல்ல ஒருங்கிணைப்பு இருந்தது. பாரிஸ் ஒலிம்பிக் கிராம துப்பாக்கி சுடுதல் மையத்தில் இருந்து எனது ஓட்டல் வரை நீண்ட துாரம் நடந்து வந்தார் மனு. இதனால் உடல் அளவில் பலம் பெற்றார். இரு பதக்கம் வென்றார்

தேசிய ரைபிள் சங்கத்தின் வீரர்கள் தேர்வு முறை 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றப்படுகிறது. இதனால் சவுரப் சவுத்ரி, ஜித்து ராய் போன்ற திறமையானவர்கள் பாதிக்கப்பட்டனர். ஒலிம்பிக்கில் சாதித்தவர்களை கூட கண்டு கொள்வதில்லை. இவர்களை பாதுகாக்க தேவையான 'சிஸ்டம்' இல்லை. நிலையான தேர்வு முறையை அறிவிக்க வேண்டும்,''என்றார்.

Advertisement