கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவருக்கு வீர மரண பேனர் வைத்ததால் சர்ச்சை

5

சென்னை: இஸ்ரேல் நாட்டின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்ட, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை, வீரரை போல சித்தரித்து, சென்னையில், 'பேனர்' வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானில் இருந்து, ஹிஸ்புல்லா என்ற பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக, 1992 முதல் ஹசன் நஸ்ரல்லா இருந்து வந்தார். அந்நாட்டின் அறிவிக்கப்படாத அதிபராகவும் செயல்பட்டு வந்தார்.

பதுங்கி இருந்தார்



இரண்டு நாட்களுக்கு முன், லெபனானின் பெய்ரூட் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், அவர் பதுங்கி இருந்த போது, இஸ்ரேல் ராணுவத்தால் ஏவுகணை வீசப்பட்டு கொல்லப்பட்டார். இதனால், 32 ஆண்டுகளாக குடைச்சல் கொடுத்து வந்த ஹிஸ்புல்லா அமைப்புக்கு முடிவுரை எழுதப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் கூறி வருகிறது.



இந்நிலையில், சென்னை மீர்சாகிப்பேட்டை பகுதியில், பள்ளி வாசல் அருகே, ஹசன் நஸ்ரல்லாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 'பேனர்' வைக்கப்பட்டு உள்ளது. இதில் இடம் பெற்று உள்ள வாசகங்கள், உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களை கவனித்து வரும் போலீசாருக்கு சவால் விடும் வகையில் உள்ளன.


'உலகத்தின் மாபெரும் வீரன், இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்த ஹிஸ்புல்லா தலைவர் வீர மரணம் அடைந்தார்' என, பேனரில் புகழாரம் சூட்டப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அம்பலமானது



சமீபத்தில் தான், சென்னை ராயப்பேட்டை பகுதியில், ஹிஸ்ப் உத் தஹ்ரீர் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்து, ரகசிய பயிற்சி மையம் நடத்தியது அம்பலத்துக்கு வந்தது. இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


தற்போது, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக குரல் எழுந்துள்ளதால், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் பலர் இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, ரகசியமாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Advertisement