9 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை!

சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று(செப்.,30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.


தமிழகத்தில் உள்மாவட்டங்களின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி ஆகிய ஒன்பது மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர், 3ம் தேதி வரை சில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை; அக்., 5 வரை லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.


சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement