ரூ.10.87 கோடி போதை பொருட்கள்: தமிழகத்தில் 9 மாதங்களில் பறிமுதல்

1

சென்னை : ''தமிழகத்தில் ஒன்பது மாதங்களில், 10.87 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.


இந்திய தோல் ஏற்றுமதி கழகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சென்னை மாநகர காவல்துறை ஆகியவை சார்பில், சென்னை தீவுத்திடல் அருகில், போதைப்பொருள் இல்லாத சமூகத்திற்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி, வாழ்த்தினார்.


பின் அவர் அளித்த பேட்டி:

நிகோட்டின் சேர்க்கப்பட்ட உணவு பொருட்களுக்கு, தமிழக அரசு, 2013 முதல் தடை விதித்துள்ளது. தமிழகம் முழுதும் உணவு பாதுகாப்பு மற்றும் போலீஸ் அதிகாரிகள், 391 குழுக்களை அமைத்து, சோதனையிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பான்பராக், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.

கடந்தாண்டு நவம்பர் முதல் ஜூலை 15 வரை தமிழகம் முழுதும், 3 லட்சத்து, 6,157 கடைகள், குடோன்கள் மற்றும் வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்த, 19,822 கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

மேலும், 10.87 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஒரு லட்சத்து, 32,890 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement