திருப்பதி லட்டு பிரச்னை: நீதி விசாரணை தேவை!

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலை ஸ்ரீ வெங்கடாசலபதி கோவிலில், பிரசாதமாக வழங்கப்படும் லட்டு மிகவும் பிரபலமானது. திருமலையில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது, 1715ம் ஆண்டில் இருந்து தொடர்கிறது.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'திருமலையில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பது பரிசோதனை வாயிலாக கண்டறியப் பட்டு உள்ளது. முந்தைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் தான் இந்த தவறு நடந்துள்ளது' என தெரிவித்தது, பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நாயுடுவின் குற்றச்சாட்டை மறுத்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன், 'லட்டு தயாரிப்பில், எங்கள் ஆட்சியில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை. கடவுளின் பெயரில் நாயுடு அரசியல் செய்கிறார்' என்று பதிலளித்தார்.

இந்நிலையில், திருமலையில் லட்டு தயாரிப்பதற்கான நெய்யில் விலங்கின் கொழுப்பு சேர்க்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த, ஒன்பது பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை சந்திரபாபு நாயுடு நியமித்துள்ளார். இந்த கலப்பட விவகாரத்தில், தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி என்ற நிறுவனத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

உணவு மற்றும் கடவுள் வழிபாடு விஷயத்தில், இந்தியர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை. நாடு சுதந்திரம் பெறும் முன், 1857ம் ஆண்டில், துப்பாக்கி தோட்டாக் களில் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு பயன்படுத்திய விவகாரத்தில், ஆங்கிலேய ஆட்சியாளர்கள், இந்தியர்களின் உணர்வுகளை கவனத்தில் கொள்ள மறுத்ததால், பெரிய புரட்சியே வெடித்தது.

அப்படித்தான், லட்டுவுக்கான நெய் கலப்பட விவகாரமும் சந்திரபாபு நாயுடுவின் அறிவிப்புக்கு பின், மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷியாமளா ராவ், 'தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் அனுப்பிய நெய்யின் மாதிரி, குஜராத் மாநிலத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு ஆணையத்தின் ஆய்வகத்திற்கு, சோதனைக்காக மே 15ம் தேதி அனுப்பப்பட்டது. அதன் வாயிலாகவே கலப்படம் தெரியவந்தது' என்று கூறினார்.

அதே நேரத்தில், உ.பி., மாநிலம், காஜியாபாதில் உள்ள தேசிய உணவு ஆய்வகம்தான், உணவின் தரத்தை பரிசோதனை செய்வதில் முதன்மையான நிறுவனம். அந்த நிறுவனத்திற்கு, நெய்யின் மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பாமல், குஜராத் மாநிலத்திற்கு அனுப்பியது ஏன் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. நெய் பிரச்னை தலை துாக்கியதால், கோவில்களை நிர்வகிப்பதில் இருந்து அறநிலையத் துறையும், அரசும் விலகிக் கொள்ள வேண்டும் என்ற கோஷங்கள், ஹிந்து அமைப்புகள் தரப்பில் எழுந்துள்ளன.

மற்ற நாடுகளில் எப்படியோ, நம் நாட்டில் உள்ள சைவ உணவு பிரியர்கள், ஏதேனும் ஒரு நம்பிக்கையை பின்பற்றுபவர்களாகவே இருப்பர். அதேபோல, ஒவ்வொரு கோவிலிலும் அதற்கே உரிய வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த வழிபாட்டு முறைகளும், பாரம்பரியமும், மற்ற அனைவராலும் மதிக்கப்படுகின்றன.

அப்படிப்பட்ட நிலையில், ஒரு தரப்பினர் விரும்பாத உணவை, அவர்களுக்கே தெரியாமல் அவர்களை மறைமுகமாக உண்ண வைப்பது, அரசியல் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையை மீறுவதாகும். ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ற உணவை உண்ணவிடாமல் தடுப்பதாகும்.

எது எப்படியோ, 100 கோடிக்கும் மேற்பட்ட ஹிந்துக்களின் அடிப்படை உரிமையை பாதிக்கக் கூடிய வகையிலான இந்த கலப்பட பிரச்னையில் உண்மை நிலையை கண்டறிய, சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது தற்போதைய நீதிபதி தலைமையிலான குழுவின் வாயிலாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்.

அதுமட்டுமின்றி, திருமலையில் வினியோகிக்கப்படும் பிரசாதம் மற்றும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தை உறுதிசெய்ய, சிறப்பான ஆய்வகம் ஒன்றையும் அங்கு அமைக்க வேண்டியது அவசியம். அப்போது தான், திருப்பதி போன்ற உயரிய புனித தலங்களில் கலப்பட பிரச்னை தலைதுாக்காமல் இருக்கும்.

Advertisement