ஒலிம்பிக் பதக்கம் இல்லை; மனது வலிக்கிறது என்கிறார் மேரி கோம்

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்காதது, மிகுந்த மனவலியை ஏற்படுத்தியது என குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.


குத்துச்சண்டை போட்டிகளில், 6 முறை உலக சாம்பியன் பட்டமும், 2012 லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர் மேரி கோம்.


இவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

2024 பாரிஸில் நடந்த ஒலிம்பிக் குத்துச்சண்டை பிரிவில், இந்தியா சார்பில், 6 பேர் கலந்து கொண்டனர். இதில் 2 ஆண்களும், 4 பெண்களும் அடங்குவர். துரதிஷ்டவசமாக, பாரிஸ் ஒலிம்பிக்கில் நமக்கு பதக்கம் கிடைக்கவில்லை. பதக்கத்தை நோக்கிய செயல்பாடு இல்லையா அல்லது வேறு சில காரணமா? என்ன நடந்தது என்பது தெரியவல்லை.

75 கிலோ பிரிவு பெண்கள் குத்துசண்டையில் பங்கேற்ற லவ்லினா, காலிறுதி போட்டியில், சீனாவின் லி கியானிடம் தோற்று விட்டார்.

71 கிலோ பிரிவு ஆண்கள் குத்துசண்டை போட்டியில், பங்கேற்ற இந்திய வீரர், நிஷாந்த் தேவ் காலிறுதி போட்டியில், மெக்சிகோவின் மார்கோ வெர்டேவிடம் தோல்வியடைந்தார்.

அதேபோல, இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற நிகத் ஷரீன் (50கிலோ பிரிவு) காமன்வெல்த் சாம்பியன் அமித் பங்கல்(51 கிலோ பிரிவு) பிரீத்தி பவார்(54 கிலோ பிரிவு) ஆகியோர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டனர்.


இதெல்லாம் பார்க்கும்போது. உலக சாம்பியன் மற்றும் பதக்கம் வென்ற எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. மனம் வலிக்கிறது. ஆகவே, வரும் காலங்களில் நடைபெற உள்ள போட்டிகளில், இன்னும் அதிகமான பயிற்சியும், கடின உழைப்பும் இருந்தால் பதக்கம் வெல்லலாம்.

இவ்வாறு மேரி கோம் கூறினார்.

Advertisement