பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், ரூ500க்கு காஸ் சிலிண்டர்; வாக்குறுதிகளை அள்ளி வீசி அனல் பறந்த ராகுல் பிரசாரம்

3

சண்டிகர்: 'ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், ரூ.500க்கு காஸ் சிலிண்டர் வழங்கப்படும்' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.


90 தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு வரும் அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. அக்டோபர் 8ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆளும் கட்சியான பா.ஜ., ஆட்சியை தக்க வைக்க ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள நரேன்கர் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பேசியதாவது:



கடன் தள்ளுபடி




விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி விரும்பவில்லை. உங்களால் (பிரதமர்) விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியாவிட்டால், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனையும் தள்ளுபடி செய்யக்கூடாது என்று நான் கூற விரும்புகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மகிளா சக்தி யோஜனா திட்டத்தின் கீழ், பெண்களின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.2,000 டெபாசிட் செய்யப்படும்.



பழைய ஓய்வூதிய திட்டம்




ரூ.500க்கு எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும். சமூக பாதுகாப்புக்காக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம். விதவைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.6,000 செலுத்தப்படும். வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொண்டு வரப்படும். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement