பாலியல் வழக்கு: நடிகர் சித்திக்கை கைது செய்ய தடை

புதுடில்லி: மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமின் வழங்கியும், கைது தடை விதித்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.


பிரபல மலையாளர் நடிகர் சித்திக் 2016ல் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை ஒருவர் போலீசில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார், நடிகர் சித்திக்கிற்கு எதிராக பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். சித்திக் மீதான வழக்கில் அதிகபட்ச ஆதாரங்களை போலீசார் மீட்டுள்ளதாக தெரிகிறது. ஹோட்டலில் நடந்த சாட்சிய சேகரிப்பில், சித்திக் மற்றும் புகார்தாரரும் ஒரே காலகட்டத்தில் ஹோட்டலில் தங்கியிருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.


இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி, சித்திக் கேரளா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த உத்தரவை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா, திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, 'நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமின் வழங்கியும், கைது தடை விதித்தும்' உத்தரவிட்டது. இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக கேரளா அரசு பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement