திருப்பதி லட்டு விவகாரம்; பேட்டி அளிக்கும் அவசியம் என்ன: சந்திரபாபுவுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி!

18

புதுடில்லி: திருப்பதி லட்டு விவகாரத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பினர். திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது தொடர்பான ஆய்வறிக்கையில் தெளிவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.




பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதை ஆய்வறிக்கையும் உறுதி செய்யப்பட்டது.


இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி சுப்ரீம் கோட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று(செப்.,30) நீதிபதிகள் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆந்திரா அரசு, 'லட்டு தயாரிப்புக்கு நெய் உரிய தரத்தில் இல்லாத போது சோதனைக்கு அனுப்பினோம். 2வது முறையும் சோதனைக்கு அனுப்பினோம். பின்னர் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது' என விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பினர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:


* இந்த விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக கடவுளை வைத்திக்க வேண்டும்.


* மத உணர்வுகளை மதிக்க வேண்டும்.


* திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது தொடர்பான ஆய்வறிக்கையில் தெளிவில்லை.


* அரசியல் சாசனத்தை கையில் வைத்திருக்கும் முதல்வர் அலுவலகம் கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும்.


* லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்?


* திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது ஏன்?


* எஸ்.ஐ.டி., குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு முன் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டிய அவசியம் என்ன?


* கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது.



* லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் எங்கே?


* சுவை மாறியதாக கூறப்படும் லட்டுகள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனவா?


* தற்போதைய நிலையில் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட நெய் லட்டு தயாரிக்க பயன்படுத்தவில்லை என்பது தெரிய வருகிறது.


* தொடர்ந்து புகார் கிடைக்கபெற்றிருந்தால் நெய் டேங்கர்கள் அனைத்திலும் மாதிரி எடுத்திருக்க வேண்டும்.


* திருப்பதி லட்டு விவகாரத்தை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள எஸ்.ஐ.டி., விசாரிப்பதா? அல்லது சுதந்திரமான விசாரணை அமைப்பைக் கொண்டு விசாரிப்பதா? என்பதை மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement