இந்தியாவுக்கு இரண்டு வெண்கலம்: உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில்

லிமா: உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் இரண்டு வெண்கலம் கிடைத்தது.
பெருவில், உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் 10 மீ., 'ஏர்ரைபிள்' கலப்பு அணிகளுக்கான தகுதிச் சுற்றில் இந்தியாவின் கவுதமி, அஜய் மாலிக் ஜோடி 628.9 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் இந்தியா, குரோஷியா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய கவுதமி, அஜய் மாலிக் ஜோடி 17-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

இப்பிரிவில் பைனலில் சீன அணி 17-15 என, பிரான்சை வீழ்த்தி தங்கம் வென்றது.

இரண்டாவது வெண்கலம்: பின், 10 மீ., 'ஏர் பிஸ்டல்' கலப்பு அணிகளுக்கான தகுதிச் சுற்றில் இந்தியாவின் லக்சிதா-பிரமோத் (575.13 புள்ளி), கனிஷ்கா-முகேஷ் (573.14 புள்ளி) ஜோடிகள் முறையே 3, 4வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு முன்னேறின. இதில் லக்சிதா-பிரமோத் ஜோடி 16-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலத்தை தட்டிச் சென்றது. இது, இத்தொடரில் லக்சிதா கைப்பற்றிய 2வது பதக்கம். ஏற்கனவே இவர், அணிகள் பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.
இப்பிரிவின் பைனலில் ஜெர்மனி அணி 17-9 என உக்ரைனை வீழ்த்தி தங்கம் கைப்பற்றியது.

இத்தொடரில் 2 தங்கம், 3 வெண்கலம் என 5 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Advertisement