பஸ் ஊழியர் கோரிக்கை தொழிற்சங்கம் 'கெடு'

சென்னை: “போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கையை, வரும் 10ம் தேதிக்குள் அரசு நிறைவேற்றாவிட்டால், போக்குவரத்து அலுவலகங்கள் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்,” என, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

தலைமை செயலகத்தில், போக்குவரத்து துறை செயலர் அலுவலகத்தில் மனு அளித்த பின், அவர் அளித்த பேட்டி:



மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்த ஊதிய ஒப்பந்த பேச்சு, பின், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று மாற்றப்பட்டது. தற்போது, ஐந்து ஆண்டுகளை கடந்தும் ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தாமல் தள்ளி வைத்துள்ளனர். இந்த பேச்சை உடனே துவக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக, 3,500 ரூபாய் வழங்க வேண்டும்.


தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. அ.தி.மு.க., ஆட்சியில், கொரோனா காலத்திலும், 10 சதவீத போனஸ் வழங்கினர். கடந்த ஆண்டு போராடி, 20 சதவீத போனஸ் பெற்றோம். இந்த ஆண்டு, 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும்.

கோரிக்கைகளை, 10ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், மண்டல, கோட்ட அலுவலகங்கள் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement