விதிமுறை மீறி செயல்பட்ட வணிக வளாகத்திற்கு 'சீல்'


விதிமுறை மீறி செயல்பட்ட
வணிக வளாகத்திற்கு 'சீல்'
கிருஷ்ணகிரி, அக். 1-
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட வணிக வளாகத்திற்கு, கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலர்கள் நேற்று, 'சீல்' வைத்தனர்.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், 'மெட்ரோ பஜார்' வணிக வளாகம் இயங்கி வருகிறது இதை கண்ணன், குமுதா ஆகியோர் குத்தகை எடுத்து நடத்தி வருகின்றனர். நேற்று கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு தலைமையில், நகராட்சி தலைவர் பரிதாநவாப் மற்றும் அலுவலர்கள், 'மெட்ரோ பஜார்' வணிக வளாகத்தை மூடி, 'சீல்' வைத்தனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், நகராட்சிக்கு சொந்தமான இந்த இடம் குத்தகைக்கு விடும்போது தரைதளம் வணிக வளாக கடைகள், உணவு விடுதி முதல் தளத்தில், 21 கடைகள் வாடகைக்கு விடப்பட்டது. ஆனால், இதில், மொத்தமாக மெட்ரோ பஜார் வணிக வளாகம் என்ற பெயரில் செல்புகள், கேபின்கள் அமைத்துள்ளனர். வணிக வளாகத்தை சுற்றி பல்வேறு சிறு கடைகளுக்கு உள்குத்தகை, வாடகைக்கு விட்டுள்ளனர்.
நகராட்சி குத்தகை விதிப்படி அனுமதி பெறாமல், கட்டடத்தை மாற்றி அமைத்து, வணிக வளாகம் அமைத்தது குறித்து, 3 முறை நோட்டீஸ் அனுப்பியும் விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து கடந்த மாதம், 27ல், கண்ணன், குமுதா ஆகியோரது குத்தகை உரிமத்தை ரத்து செய்தும், கட்டடத்தை நகராட்சிக்கு ஒப்படைக்குமாறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், அவர்கள் கட்டடத்தை நகராட்சியிடம் ஒப்படைக்கவில்லை. இதனால் வணிக வளாகத்திற்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement