சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதி பொறுப்பேற்பு

சென்னை : உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த ஷமிம் அகமதுவை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்து, ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார்.



சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நேற்று நீதிபதி ஷமிம் அகமதுவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் பாஸ்கர், மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடந்த 1966ல் பிறந்த நீதிபதி ஷமிம் அகமது, 1993ல் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியை துவக்கினார். கடந்த, 2019ல் அலகாபாத் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2021ல் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற நீதிபதி ஷமிம் அகமதுவை வரவேற்று, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் உள்ளிட்டோர் பேசினர். இறுதியில், புதிய நீதிபதி ஷமிம் அகமது ஏற்புரையாற்றினார்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை, 67 ஆக உயர்ந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில், எட்டு நீதிபதிகள் பதவி காலியாக உள்ளது.

Advertisement